நடமாட்டத்தடை தளர்வுகால புதிய நடைமுறை இதோ

நடமாட்டத்தடை தளர்வுகால புதிய நடைமுறை இதோ

ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய  அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்.

அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டங்கள், தொடர்ந்தும் அதேபோன்று நடைமுறைப்படுத்தப்படும். அரச மற்றும் தனியார்த்துறை நிறுவனங்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களைக் கொண்டு பணிகளைத் தொடர, நிறுவனத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், குறைந்தளவான நபர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

கொவிட் ஒழிப்புக்கான விசேட குழு, இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்றுகூடிய போதே, ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கொவிட் அல்லாத மரணங்களை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதால், இறுதிக் கிரியைகளை நடத்துவதில் தாமதங்கள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளை பலரும் முன்வைத்தனர். இதன் மூலம், உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் முகங்கொடுக்கும் பொருளாதார மற்றும் ஏனைய கஷ்டங்களைக் கருத்திற்கொண்டு, கொவிட் காரணமாகவன்றி மரணிக்கின்றவர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை, ஜூன் மாதம் 14ஆம் திகதியன்று தளர்த்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், ஜூன் மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில், ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள்  குறித்து, ஜனாதிபதி விரிவாக விளக்கினார். இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான 04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது, சுமார் 4 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஜூலை மாதமளவில், குறைந்தபட்சம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற உள்ளன என்றும் அதன்படி, விரைவில் அதிகளவில் தடுப்பூசிகளை வழங்கக்கூயடியதாக இருக்கும் என்றும், அரச ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

அமைச்சர்களான பவித்ரா வன்னியாரச்சி, காமினி லொக்குகே, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அலுத்கமகே, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ரமேஷ் பதிரண, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டாபுள்ளே, சன்ன ஜயசுமன, பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் விசேட வைத்தியர் சஞ்சீவ முனசிங்க, முப்படைகளின் தளபதிகள், சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image