முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா "குரு அபிமானி" கொடுப்பனவு
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் 'குரு அபிமானி' தேசிய நிகழ்வில் அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் இதன்போது ஆரம்பகால குழந்தை பருவ கல்வி குறித்த தேசிய கொள்கையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தனர்.
குரு அபிமானி தேசிய வேலைத்திட்டத்தை மையமாகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பிரதமர் மற்றும் பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவினால் இதன்போது குறித்த கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
சுபீட்சத்தின் நோக்கு திட்டத்திற்கமைய அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிறுவப்பட்டுள்ள சுபீட்சத்தின் முன்பள்ளி கட்டுமானத்திற்கான 25 இலட்சம் ரூபாய் மற்றும் 1500 முன்பள்ளிகளின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 6 இலட்சம் ரூபாய் நிதி வழங்கலும் பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது.
முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, அறநெறிப் பாடசாலைகள், கல்விச் சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.