தாதியர்களுக்கு பட்டம் வழங்கல் - கொடுப்பனவை அதிகரித்தல் தொடர்பான தீர்மானம்

தாதியர்களுக்கு பட்டம் வழங்கல் - கொடுப்பனவை அதிகரித்தல் தொடர்பான தீர்மானம்

தாதியர் பட்டத்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைவர், மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முறுத்தெட்டுவே ஆனந்த தேரரின் வேண்டுகோளுக்கமைய அலரி மாளிகையில் நேற்று (09) நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது தாதியர் பட்டத்தை வழங்குவதற்கான பணி, சட்ட வரைவுகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வரைவை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது இந்த கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.

பிரதமர், ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட பின்னர் இதுவரை அக்கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்த முறுத்தெட்டுவே தேரர், அக்கொடுப்பனவை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து பொதுத் தீர்மானம் மேற்கொண்டு எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தில் அதனை நிறைவேற்ற முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னஆராச்சி, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் எஸ்.எச்.முனசிங்க, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் தலைமை செயலாளர் எச்.ஏ.டீ.கல்யாணி, உப தலைவர் ஆர்.கே.படுவிட, உப செயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்சா, கந்தானை தாதியர் கல்லூரியின் அதிபர் டப்ளிவ்.ஏ.கீர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Author’s Posts