சுகாதார பணிக் குழாமினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமை மற்றும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காமை என்பனவற்றுக்கு எதிராக நாடுமுழுவதும் உள்ள வைத்திய சாலைகள் மற்றும் சுகாதார காரியாலயங்களில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய இன்று (08) ஊவா மாகாணத்திலும், எதிர்வரும் 10ஆம் திகதி மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், 11ஆம் திகதி மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், 14ஆம் திகதி தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார காரியாலயங்களில் முற்பகல் 11 மணி முதல் மதியம் 12 வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது.
கீழ்வரும் விடயங்களை அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
01. தற்போதைய அவசர நிலைமைக்கு மத்தியில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுகின்ற சுகாதார பணிக்குழாமினருக்காக முறையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தாமை.
02. கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்களை தொடர்ச்சியாக போதுமானளவு வழங்காமை.
03. சுகாதார பணிக் குழுவினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் நடைமுறைப்படுத்தாமை.
04. பயிலுனர் சுகாதார பணிக் குழுவினருக்கு நிரந்தர நியமனம் வழங்காமை காரணமாக அவர்கள் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
05. பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை வைத்தியசாலைகளிலும், சுகாதார காரியாலயங்களிலும வெவ்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை.
06. விசேட கொவிட்-19 கொடுப்பனவு அனைத்து பணிக் குழுவினருக்கும் வழங்கப்படாமை.
07. கொரோனா தடுப்பூசி வழங்கல் மற்றும் தனிமைப்படுத்தல் முறைமையை உரியவாறு பின்பற்றாமை.
08. நிறைவு செய்யப்பட்ட சேவைகளுக்காக உரிய கொடுப்பனவு வழங்கப்படாமை.
09. இணங்கப்பட்டவாறு சீருடை கொடுப்பனவு வழங்கப்படாமை.
10. இணங்கப்பட்ட ஐந்து நாட்கள் வாரத்தை நடைமுறைப்படுத்தாமை.
11. பல்நோக்கு அபிவிருத்தி செயலணி உறுப்பினர்களை சுகாதார பணி குழுவினரின் சேவைக்காக சட்டவிரோதமாக உள்ளீர்த்தல்.
12. வருடாந்த பதவி உயர்வு நடைமுறைப்படுத்தப்படாமை.
இந்த விடயங்கள் காரணமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு அசௌகரியங்களை முகம் கொடுத்துள்ளனர்.
எனவே இவற்றுக்கு தீர்வு வழங்கப்படாமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார காரியாலயங்களில் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.