தனியார் துறை ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட யோசனைகள்
கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் தனியார்த்துறை ஊழியர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து, இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், தனியார் ஊழியர்கள் மத்திய நிலையம் உள்ளிட்ட 18 தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுக்கு அறியப்படுத்தியுள்ளன.
கொரோனா பரவலுக்கு மத்தியில், தனியார்த்துறை ஊழியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பானது,
01. கொரோனா வைரஸட தற்போது நாட்டில் வேகமாக பரவிவருகிறது. அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொள்ளாமையால், அதன் பிரதிபலனை பொதுமக்கள் தற்போது அனுபவித்து வருகின்றனர். சுகாதாரத்துறையின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில், அரசாங்கம் நடமாட்டத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும், ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளின் செயற்பாடுகளுக்கு, அந்த நடமாட்டக் கட்டுப்பாடு பொருந்தாது என்பதனால், நடமாட்டத்தடை விதித்து, தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான சுகாதாரத்துறையின் வேலைத்திட்டம் வெற்றியளிக்குமா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.
02. தனியார் துறையின் பல தொழிற்சாலைகளில் கொரோனா நோயாளர்கள் பாரிய அளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது வரையில் குறிப்பிடத்தக்களவானோர் இந்த நோயினால் மரணித்துள்ளனர். நோயாளர்கள் அதிகளவில் பதிவாகின்றமை ஊடாக அந்த நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்லும்போது எந்த ஒரு சுகாதார பாதுகாப்பு நடைமுறையும் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவருகிறது. எனவே, அந்த நிறுவனத்தில் பாரியளவான ஊழியர்களை தொற்றுக்கு உள்ளாகியமை தொடர்பில் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பொறுப்புக்கூற வேண்டும். குறிப்பாக நோய் அறிகுறிகள் தென்படுகின்ற ஊழியர்கள்கூட சேவைக்கு அழைக்கப்பட்டு, நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், ஏனைய ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்பட்டு, தொழிற்சாலை பணிகளை முன்னெடுத்தமை காரணமாக பெருமளவான ஊழியர்கள் நோய்தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அத்துடன் தொற்றுப் பரவல் ஆரம்பத்தின்போது கடைபிடிக்கப்பட சுழற்சி முறையிலான வேலை முறைமை தற்போது கைவிடப்பட்டுள்ளது.
03. இவ்வாறாக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் தொடர்பான எந்த ஒரு அக்கறையுமின்றி, தங்களுடைய இலாப நோக்கத்தை மாத்திரம் இலக்காகக் கொண்டு செயற்பட்ட சந்தர்ப்பத்தில், அரசாங்கம் தமக்கு அவசியமானவாறு நடைமுறைகளை தயார்ப்படுத்தியது பாரிய பிரச்சினையாகும். நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும், தொற்றாளர் கொத்தணியாக உருவாகும் தனியார் துறை நிறுவனங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கியமை ஊடாக இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக நிறுவன உரிமையாளர்களுக்கு தொற்று பரவலுக்கு மத்தியில் லாபம் அடைவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை தெரிய வருகின்றது. இதன் காரணமாக நடமாட்டத்தையும் தடை காலப்பகுதியில் தனியார் துறை நிறுவனங்களை இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கியமைக்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.
04. மேலும் தொழில் அமைச்சர் என்ற அடிப்படையில் நீங்கள் தனியார் துறை நிறுவன ஊழியர்கள், குறைந்த சம்பளம் வழங்குவதற்கு அனுமதி வழங்கியமை இந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியே என்பது தெளிவாகின்றது. நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், நிறுவனங்களை இயக்குவதற்கு எதிராக எதிராக ஏற்படும் ஊழியர்களின் எதிர்ப்பு இந்த சம்பள முறைமையின் ஊடாக அடக்கப்படுகிறது. நோய் இவ்வாறு நாட்டுக்குள் பரவியமைக்கு, தற்போதைய அரசாங்கமும் தொழில் அமைச்சர் என்ற ரீதியில் நீங்களும் தனிப்பட்ட முறையில் பொறுப்புக்கூற வேண்டும் என நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம்.
05. மேலும் தொற்று பரவலுக்கு மத்தியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பல பிரச்சினைகள் உள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறியமுடிகின்றது. பல்வேறு நபர்கள் மற்றும் குழுக்களின் அழுத்தங்களின் அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன், அதற்காக விஞ்ஞானரீதியான முறைமையில் தயாரிக்கப்பட வேண்டிய தேசிய வேலைத்திட்டம் இதுவரையில் தயாரிக்கப்படவில்லை.
06. தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி பில்லியன் கணக்கான லாபத்தை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனங்களின் உரிமையாளர்கள் இவ்வாறான உலக பரவல் தொற்றுக்கு மத்தியில் தங்களின் லாபத்தின் பின்னால் செல்வதற்கு பதிலாக தமது ஊழியர்களுக்கு 1 அல்லது 2 இரண்டு மாதங்கள் சம்பளத்தை வழங்கி நோயை கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காதமையின் ஊடாக அவர்களின் உழைப்பு சுரண்டல் அனைவருக்கும் தெளிவாக தெரிகின்றது. எவ்வாறிருப்பினும், தொழில் அமைச்சர் என்ற அடிப்படையில் மக்களின் வாக்குகளால் தெரிவான நீங்கள் உள்ளிட்ட அரசாங்கமானது நிறுவன உரிமையாளர்களின் அவசியத்திற்கமைய செயற்படுகின்றதை நாங்கள் கண்டிக்கின்றோம். எனவே பின்வரும் தீர்மானங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
- குறைந்த சம்பளத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்கிய தீர்மானத்தை உடனடியாக திருத்தம் செய்தல்.
- சுகாதாரப் பாதுகாப்பு முறைமைகள் இன்றி இயங்கும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
- சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய அமுலாகும் நடமாட்ட கட்டுப்பாட்டு காலப்பகுதியில், அனைத்து தனியார் துறை நிறுவனங்களும் ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்துடன் விடுமுறை வழங்குதல்.
- தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய அனைத்து பொது மக்களுக்காகவும் தடுப்பூசிளிக்கும் செயற்பாட்டுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக உருவாக்க வேண்டும், என்பதுடன் அதில் தொற்றுப் பரவலுக்கு பாரிய அளவில் முகம் கொடுத்துள்ள தனியார்துறை ஊழியர்களுக்கு விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.