ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் ஆகியோர் கல்வி அமைச்சுக்கு நேற்று (20) பேச்சுவார்த்தைக்காக சென்றிருந்தனர்.
இந்த நிலையில், தங்களது கடிதத்தைக் கையளித்ததன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் நாங்கள் கல்வி அமைச்சிலிருந்து அண்மையில் ஒரு ஆவணத்தை - அமைச்சரவைப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டோம்.
2020 ஒக்டோபர் மாதம் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் இந்த அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியளவில் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் 4,433 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக இதனூடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் 2020 ஒக்டோபர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையில் அனுமதியும் கிடைத்துள்ளது.
2020ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஆனால் இப்போது 2021 மே மாதம் ஆகியுள்ளது. எந்த ஒரு ஆட்சேர்ப்பும் இடம்பெறவில்லை. தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஆட்சேர்ப்;பதற்கான பரீட்சை இறுதியாக 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.
அதேநேரம், தற்போது 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் வெற்றிடங்கள் அண்ணளவாக இருக்கின்றன. இந்த நிலையில் கல்வி அமைச்சு என்ன செய்கின்றது?
அரசாங்கம் இந்த அமைச்சரவை அனுமதிக்கு அமைய ஆசிரியர்கள் வெற்றிடத்தை நிரப்பாமல், தமது வேலைகளை செய்து கொண்டிருக்கின்றது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்துள்ளது. அரசாங்கம் தனது வேலையை நிறுத்தவில்லை.
இந்த பிரச்சினைகள் தொடர்பான ஆவணத்தை நாங்கள் நுழைவாயிலில்தான் கையெழுத்திட்டு வந்திருக்கின்றோம். செயலாளரின் கைகளில் கையளிக்கும் ஆவணங்களுக்கு பதில் கிடைக்காத காலம் இது. அதனால்தான் நாங்கள் இதை ஊடகங்களிடம் கூறுகின்றோம் பொதுமக்களுக்கு கூறுகின்றோம் இதற்காக நீங்கள் முன்வாருங்கள் என்று
பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை என்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். பல நாட்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் கல்வி கற்றுக்கொடுப்பதற்கு எங்கே ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்ற கேள்வியை நாங்கள் கேட்கின்றோம். எனவே, இந்த பிரச்சினையில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
என்று தெரிவித்துள்ளார்.