தோல்வியடைந்து கொண்டிருக்கும் போதெல்லாம் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் பேரழிவுகளை ஏற்படுத்துவதையும் பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா தொற்றை அவை மிகவும் வசதியாக பயன்படுத்துகின்றதாக இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் தமது தொழிலாளர் தின செய்தியில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எல்லா சவால்களையும் முறியடித்து முன்னேறுவோம்
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்
உலக தொழிலாளர் தினத்தை மக்களை சுரணடுகின்ற முதலாளி வர்க்கத்தினர் தங்களது தினமாக ஆக்கிக்கொண்டு அதன் முக்கியத்துவத்தை மலினப்படுத்தி வருவதுடன், அத்தினத்திற்கு பூரணமான உரித்துடைய தொழிலாளர் வர்க்கத்தை அத்தினத்தை நினைவு கூராமல் தடுக்க நேரடியான மறைமுகமான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது.
இலங்கையில் மேதின நினைவு கூரலை தடுக்க 1965 இலும் 2018 இலும் வெசாக் தினங்களையும் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தின குண்டு வெடிப்புகளையும் 2020இலும் 2021இலும் கொரோனா தொற்று அபாயத்தையும் வசதியான காரணங்களாக கொண்டதுடன் மேதின நினைவு கூரலுக்கு முட்டுக்கட்டை போட்டதை நாம் அறிவோம்.
தற்போது மனித குல இருப்பிற்கு பாரிய சவாலாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தை முறியடிக்கும் சரியான வழிவகைகளை கண்டறிந்து நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பை முழுமையாக முதலாளித்துவத்திடமும் ஏகாதிபத்தியத்திடமும் விட்டு விடாமல் மக்கள் நலன்சார்நத நோயியல் ஆய்வாளர்கள் மருத்துவ மற்றும் மருந்தாய்வாளர்கள் ,துறைசார் நிபுணர்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.
இவ்வாறு இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் விடுத்துள்ள மேதினம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த கொரோனா தொற்று ஆய்வுகூடத்தயாரிப்பென கண்டறியப்படினும் திட்டமிட்டு பரப்பப்பட்டதென கண்டறியப்படினும் கவனயீனமாக பரவியதென கண்டறியபபடினும் அதற்கு பொறுப்பானவர்களுக்கு மனித குல அழிப்புக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும். அத்துடன் முறையான சரியான தொற்று தவிர்ப்பு நடவடுக்கைகளும் பாதுகாப்பான உத்தரவாதமளிக்கப்பட்ட தடுப்பு மருந்தேற்றல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் . இச்சூழலில் மக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் திட்டமிட்ட முறையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
தோல்வியடைந்து கொண்டிருக்கும் போதெல்லாம் முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் பேரழிவுகளை ஏற்படுத்துவதையும் பயன்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருக்கின்றன. தற்போது கொரோனா தொற்றை அவை மிகவும் வசதியாக பயன்படுத்துகின்றன . உலக பொருளாதார சரிவை சீர்செய்ய முதலாளித்துவ ஏகாதிபத்திய சக்திகள் ஆய்வு செய்து கொண்டிருக்கும் வேளையில்தான் கொரோனா பரவியது
இதன் விளைவாக உலகலாவிய ரீதியில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தொழில் இழந்துள்ளனர். பரந்தளவில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை முதலாளித்துவ நிபுணர்கள் நியாயப்படுத்துகின்றனர். இதிலிருந்து மீள்வதற்கு சரியான வழிமுறைகளை மக்கள் நலன்சார்நத சிந்தனையாளர்களால் குறிப்பாக மாக்சியர்களாலேயே நேர்மையாக கண்டறிந்து முன்வைக்க முடியும்.
இந்த நிலைக்கு முகங்கொள்ள முடியாது முதலாளித்துவ ஆட்சிமுறை தோல்வியடைந்துள்ளதுடன் மக்கள்மீது அடக்குமுறைகளை தீவிரப்படுத்துகின்றன.இதில் இலங்கை அரசு முன் வரிசையில் இருக்கிறது. தற்போதைய அனர்த்த சூழ்நிலையை வெற்றி கொள்ள ஜனநாயகம் நிலை நிறுத்தப்படவேண்டும்.அதற்காக ஐக்கியப்பட்ட பலமான அரசியல் ,சிவில் நடவடிக்கைகள் அவசியம். தோல்வியடைந்துள்ள ஆட்சியாளர்களை விமர்சிப்பது அம்பலப்படுத்துவது போன்றவைக்கு அப்பால் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அவசியம்.
இன்று காவத்தையில் இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், மக்கள் ஆசிரியர் சங்கம், மக்கள் தொழிலாளர் சங்கம், மக்கள் பண்பாட்டுக் கழகம், சிகரம் அமைப்பு என்பன இணைந்து நடத்தவிருந்த எமது மேதின நிகழ்வு கொரோனா தொற்று அபாயம் காரணமாக மண்டப அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.
இத்துடன் நாம் மூன்றாவது வருடமாக மேதின நிகழ்வை நடத்தமுடியாதிருக்கிறோம். இது தவிர்க்க முடியாதெனினும் ஆரோக்கியமானதல்ல இலங்கையின் ஆளும்வர்க்கத்தினரின் தவறுகளினால் ஏகாதிபத்திய நாடுகளினாலும் சக்திகளினாலும் இன்று இலங்கை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சுதந்திரம் , இறைமை ,சுயாதிபத்தியம் அச்சுறுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து விடுபட அனைத்து மக்களினதும் ஐக்கிய மும் ஒத்துழைப்பும் அவசியம்
அதனால்
*மக்களுக்கு அரசியல் அதிகாரம்
*சுதந்திர இலங்கை
*தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை
*சோஷலிச எதிர்காலம்.
என்பவற்றை இலக்காய் கொண்டு அணிதிரள்வோம்.
வாழ்க மேதினம்!
முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் ஒழிக!
சோஷலிசம் வெல்க!
தோழர் W.சோமரட்ண
(தலைவர் )
தோழர் E.தம்பையா
(பொதுச்செயலாளர் )
இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்
கொழும்பு . 01.05.2021