அரசதுறையிலுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை
தற்போது நாட்டில் உருவாகியுள்ள கொவிட் 19 நிலைமையை கருத்திற்கொண்டு கடமையாற்றுவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் அரச துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு விசேட வசதிகள் வழங்கப்படவில்லை என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
அரச நிருவாக அமைச்சினால் வௌியிடப்பட்ட 02/2021(i) சுற்றுநிரூபம் தொடர்பில் பொதுசேவை, மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைஅமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் லக்மால் திஸாநாயக்க கையெழுத்துடன் வௌியிடப்பட்ட இக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த முறை கொரோனா தொற்றின் போது அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறையின் போது அரச துறையில் பணியாற்றும் கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் கவனத்திற்கொள்ளப்பட்டது போன்று இம்முறை கவனம் செலுத்தப்படவில்லை.
நாடு பூராவும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் அரசதுறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் பொதுப் போக்குவரத்துச்சேவையை பயன்படுத்தி கடமைக்கு சமூகமளிக்கின்றனர் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அத்துடன் ஊழியர்களை பணிக்கு அழைத்தல் தொடர்பான அதிகாரம் நிறுவன பிரதானிக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் சில தலைவர்கள் சுற்றுநிரூபத்திற்கமைய செயற்படாதிருப்பது தொடர்பில் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாகும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் தாங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதுடன் அரசதுறையில் பணியாற்றும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களை பணியிடத்திற்கு அழைப்பதற்கு முன்பாக அதற்கான சலுகையினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.