சலுகைகளை நிறுத்த வேண்டாம்- தோட்டத் தொழிலாளர்கள்

சலுகைகளை நிறுத்த வேண்டாம்- தோட்டத் தொழிலாளர்கள்

அட்டன் பொகவந்தலாவ, பொகவான, குயினா தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (08) அடையாள வேலைநிறுத்தமொன்றை முன்னெடுத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டதையடுத்து ஏனைய சலுகைகள் நிறுத்தப்படுவதாக தோட்ட நிறுவாகம் அறிவித்ததையடுத்தே தோட்டத் தொழிலாளர்கள் இவ்வடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளனர்.

நிர்வாகத்தின் செயற்பாடுகளை கண்டித்து பொகவான குயினா தொழிலாளர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதுவரை காலமும் ஒரு நாள் சம்பளத்திற்காக 15 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறித்து வந்த தம்மை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள ரூபா 1000 சம்பளத்தை தொடர்ந்து நிர்வாகம் 20 கிலோகிராம் கொழுந்துப் பறிக்குமாறு தம்மை நிர்ப்பந்திப்பதாக கொழுந்து நிறுக்கும் இடத்தில் நடைபெற்ற இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், 20 கிலோகிராமிற்கு குறைவாக கொழுந்து பறித்தால் அந்த கொழுந்திற்கு தின சம்பளம் வழங்கப்பட முடியாது. அதற்கு மேலதிக கொழுந்திற்கான கொடுப்பனவான ரூபா 40 ஐ ஒரு கிலோகிராமிற்கு பெற்றுத் தருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமது தோட்டத்தின் சிறுவர் நிலையங்களில் பணிப்புரிந்த உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. .

ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்புடன் இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளும் வழங்க கம்பனிகள் முன்வரவேண்டும். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக்காட்டினர்.

பொகவான குயினா தோட்டத்தின் மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணித்தியால அடையாள ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மேற்பிரிவு தொழிலாளர்கள் தொழிலுக்கு திரும்பினர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image