தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளருக்கு அழைப்பாணை

தொழில் அமைச்சர், தொழில் ஆணையாளருக்கு அழைப்பாணை

​தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத் தீர்மானம் குறித்து வௌியான வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்க கூறி தோட்ட கம்பனிகள் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மீதான விசாரணையின் போது பிரதிவாதிகளான தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரை விடயங்களை முன்வைக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

நேற்றைய தினம் இடம்பெற்ற விசாரணையின் போது எதிர்வரும் மே மாதம் 5ம் திகதிக்கு விசாரணை ஒத்தி வைக்கபட்ட நிலையில் அன்றைய தினம் தொழில் அமைச்சர் மற்றும் தொழில் ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் மனு தொடர்பான எதிர்ப்புகளை இம் மாதம் 27ஆம் திகதி மற்றும் மீளெதிர்ப்பு மனுக்களை மே 4 ஆம் திகதி தாக்கல் செய்யுமாறும் பிரதிவாதிகள் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி அர்ஜுண ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் குழாம் மேற்படி உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது. அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனம், எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனம் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தன.

அதற்கிணங்க மனுவில் பிரதிவாதிகளாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் பிரபா சந்திர கீர்த்தி மற்றும் தேயிலை கைத்தொழில் தொடர்பான சம்பள சபையின் தலைவர் உள்ளிட்ட 18 நபர்களது பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அண்மையில் தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தினகரன்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image