பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு ஏப்ரல் 10ல் 1,000 ரூபாய் - ஜீவன் காணொளி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருக்கின்றமை இ.தொ.கா விற்கு கிடைத்த வெற்றியாகும் என அதன் பொதுச் செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சௌமிய பவனில் நேற்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
சம்பள நிர்ணய சபையின் 1000 ரூபாய் கொடுப்பனவு தீர்மானத்திற்கு எதிராக கம்பனிகள் தாக்கல் செய்திருந்த மனு இன்றையதினம் (நேற்று) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வர்த்தமானி அறிவுறுத்தலுக்கு எதிரான மனு மீதான முதற்கட்ட விசாரணையை அடுத்து கம்பனி தரப்பு கோரிக்கையை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இம்மாதம் 27ம் திகதி வரை விசாரணையை ஒத்திவைத்தது.
இதன் காரணமாக வர்த்தமானி அறிவுறுத்தலில் குறிப்பிட்டுள்ளவாறு பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபாய் சம்பளத்தை பெறக்கூடியவர்களாக இருக்கின்றார்கள். ஏற்கனவே நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச பெருந்தோட்ட யாக்கம் ஒன்றின் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளது. இது இ.தொ.காவின் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர், தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கும் இ.தொ.கா சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்ற அதேவேளை குறிப்பாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்விடயத்தில் பொறுமையாக இருந்து எம்மோடு கைகோர்த்து இருந்தமையால் அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்தேன்.
இச்செய்தியாளர் மாநாட்டில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதித்தலைவர் அனுஷா சிவராஜா நிர்வாக உபத்தலைவரும், சட்டத்தரணியுமான மாரிமுத்து, மற்றும் உபதலைவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
காணொளி கீழே உள்ள இணைப்பில்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கரங்களுக்கு ஏப்ரல் 10ல் 1,000 ரூபாய்