பெருந்தோட்டம் ஒன்றில் ஓய்வுப்பெற்ற இராணுவத்தினர் கடமையில்: இதோ அதிரடி நடவடிக்கை

பெருந்தோட்டம் ஒன்றில் ஓய்வுப்பெற்ற இராணுவத்தினர் கடமையில்: இதோ அதிரடி நடவடிக்கை

ராகலை - மாகுடுகலை தோட்டத்தில், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறு, நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகம், தோட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளது.

 
செரண்டிப்ட் பெருந்தோட்ட தனியார் நிறுவனத்திற்கும், மாகுடுகலை தோட்ட முகாமையாளருக்கும், நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகத்தினால், நேற்று இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
 
"பணிப்புறக்கணிப்பு - மாகுடுகலை தோட்டம், ஹல்கிரான்ஓயா" என தலைப்பிடப்பட்டு நுவரெலியா மாவட்ட உதவி தொழில் ஆணையாளரினால் குறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
01. மாகுடுகலை தோட்ட நிர்வாகத்தினால், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி, தோட்டத் தொழிலாளர்களை அச்சுறுத்தி தொழிலை செய்விப்பதற்கு முயற்சிக்கின்றமை மற்றும் தேயிலைத் தோட்டங்களை உரிய முறையில் பராமரிக்காமை என்பன பணிப்புறக்கணிப்புக்கு பிரதான காரணமாகும் என தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
 
02. ஓய்வுப்பெற்ற இராணுவ அதிகாரிகள், மாகுடுகலை தோட்டத்தில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளமையானது, அங்கு தொழில் சமாதானத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களை தோட்டத்திலிருந்து உடன் வெளியேற்றி, முன்னர்போன்று, தொழில் சமாதானத்தைப் பேணுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தொழிலாளர்கள், தொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்றவாறு, தோட்டத்தில் களை சுத்திகரிப்பை மேற்கொள்ளுமாறும் பரிந்துரைப்பதாக  நுவரெலியா மாவட்ட தொழில் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
இந்த அறிவிப்பின் பிரதிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும், மலையக மக்கள் முன்னணிக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image