மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அறிவித்தல்

மேற்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் அறிவித்தல்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்திற்கான முதலீட்டுத் திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இந்தியாவின் அதானி நிறுவனம் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் அநுரக் ஸ்ரீவஸ்தவா (Anurag Srivastava) இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவின் அதானி குழுமம் சமர்ப்பித்த பிரேரணையை, கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள கருத்து சரியான விடயம் அல்லவென இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் குறித்த முதலீட்டாளர்களுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம், இலங்கை துறைமுக அதிகார சபை, இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கத்தினால் பெயரிடப்பட்டுள்ள தரப்புடன் இணைந்து தனிப்பட்ட பொது மற்றும் தனியார் நிறுவனமாக அபிவித்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கம் அறிவித்தது.

இதற்காக அதானி நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுடெல்லியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குறித்த திட்டம் தொடர்பில், இந்திய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா? என்றும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதா? என்றும் இந்திய ஊடகவியலாளர் ஒருவர் வினவியுள்ளார்.

அத்துடன், தொழிற்சங்க எதிர்ப்பு காரணமாக, அந்தத் திட்டத்தை இரத்துச் செய்யும் நிலைமையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அது இந்திய அரசாங்கத்தின் கொடுக்கல் வாங்கல் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts