பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும்போது வயதெல்லை பார்க்கப்படுமாயின், அரசியல்வாதிகளுக்கும் வயதுதெல்லையை நிர்ணயிக்க வேண்டும் என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வயது எல்லை காரணமாக அநீதிக்குள்ளான வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (03) கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்னால் போராட்டம் நடத்தினர்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
அரசாங்கத்தின் தாமதப்படுத்தலின் காரணமாக வயதெல்லை கடந்த வேயைற்ற பட்டதாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். 2020 ஆம் ஆண்டு பட்டதாரி பயிலுனர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பினபோது இந்த வயதெல்லை தொடர்பான பிரச்சினையை நாங்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். 2012, 2013ஆம் ஆண்டு நியமனங்களின்போது வயதில்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டமையினால் அவர்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனது. 2013 முதல் 2010 வரையான காலப்பகுதியில் தொழில்வாய்ப்பு வழங்குவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை.
அந்த காலப்பகுதியில் அவர்களுக்கு வயதெல்லை நாற்பத்தைந்து கடந்துள்ளது. எங்களது கணக்கெடுப்பின்படியும், அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமையவும் 507 பேர் தற்போது இருக்கின்றனர்.
வயதெல்லை என்பது அவ்வளவு பெரிய காரணியாக பார்க்கப்படுமாயின், தயவுசெய்து அரச சேவையில் உயர் இடத்திலுள்ள அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஆகியோருக்கும் வயது வரம்பை விதிக்க வேண்டும். 80 வயதுக்கும் மேற்பட்ட வர்களும் இருக்கின்றார்கள். 90 வயதை அண்மிக்கின்றவர்களும் இருக்கின்றார்கள். எம்முடைய வயதில்லை தொடர்பில் அவர்கள் கதைப்பார்களாயின், நாங்கள் கட்சி தலைவர்களில் இருந்து கூட கதைக்கலாம். இந்த விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஜனக்கவிடமிருந்துகூட நாங்கள் கதைக்க முடியும். அவர்கள் வாக்கு கேட்கும்போது வயதெல்லை பார்த்தார்களா?
எனவே, இது வாழ்க்கையுடன் தொடர்புடைய பிரச்சினையாகும். 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அமைச்சரவை தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு இருக்கின்றதுஇ அதனை நடைமுறைப்படுத்துமாறு அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பிரச்சினைக்கு இன்னும் இங்கே இருக்கின்றது. எனவே தயவு செய்து இந்த பிரச்சனையை தீருங்கள்.
முன்னுதாரணம் ஒன்று இருக்கின்றது. 2012 ஆம் ஆண்டு நியமனங்கள் வழங்கப்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதியும், பிரதமரும் தலையீட்டு, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நியமன வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே, மேலும் தாமதப்படுத்தாமல் அமைச்சரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி, இந்த அனைவரையும் 2020ஆம் பட்டதாரி பயிலுனர் பயிற்சிக்காக ஆட்சேர்த்து இதற்கு தீர்வு வழங்குமாறு ஜனாதிபதியிடம் பிரதமரிடம் தாங்கள் கோரிக்கை விடுப்பதாகவும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.