இ.தொ.காவின் போராட்டத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? - அனுஷா சந்திரசேகரன் கருத்து

இ.தொ.காவின் போராட்டத்திற்கு ஆதரவா? எதிர்ப்பா? - அனுஷா சந்திரசேகரன் கருத்து

'போராட்டத்தினால் பயன் கிடைக்குமாக இருந்தால், நிச்சயமாக சம்பள உயர்வு கிடைக்குமானால், அதேபோன்று நாம் கேட்கின்ற விடயங்கள் எல்லாம் நடைபெறும் அல்லது அரை பகுதியாவது நடைபெறுமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் ஆதரவு தருவோம்.'

எமது இணையதளத்திற்கு வழங்கிய செவ்வியில், அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர், சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேள்வி - நாளைய தினம் (05) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) அழைப்பு விடுத்துள்ள போராட்டத்திற்கு உங்களது தெழிற்சங்கம் ஆதரவளிக்கின்றதா? இல்லையா? சம்பள பிரச்சினை தொடர்பான உங்களுடைய தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு என்ன?

பதில் - உண்மையாகவே கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போகின்றது என்றால், சம்பள விடயத்துடன், அதில் தொழில் பாதுகாப்பு, பெண்களுக்கான உரிமை, அதேபோல் வேலை நாட்கள் உள்ளிட்ட தொழிலாளர்;களின் நலன்புரி அம்சங்களும் உள்ளடங்கவேண்டும்.

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு வேலை செய்யும் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள். இப்பொழுது எத்தனை கிலோ எடுக்க வேண்டும்? 18 கிலோ கொளுந்து பறிப்பதற்கு சிலர் கஷ்டப்படுகின்றனர். 18 கிலோவை விட அதிகம் பறிப்பவர்களும் இருக்கின்றார்கள். அப்படியானால் கஷ்டப்படுகின்றவர்களின் நிலை என்ன? 18 கிலோ கொழுந்து பறத்தால்தான் ஒருநாள் சம்பளம் கிடைக்கும். அந்த 18 கிலோவுக்கு அரைக்கிலோ கொழுந்து குறைவாக பறித்தாலும் ஒருநாள் சம்பளம் கிடைக்காது.எனவே இது தொடர்பாக எல்லாம் பேசி, ஒரு கிழமையில் குறைந்தது 6 நாட்களாவது வேலை வழங்க வேண்டும். அவ்வாறு வேலை இல்லாவிட்டால் அந்த வேலை நாட்களுக்கான சம்பளத்தை வழங்க வேண்டும்.

அதேபோல் EPF, ETF கொடுப்பனவுகள் இந்த சம்பள பேச்சுவார்த்தையில் தேவையில்லாத ஒரு விடயமாகும். ஏனெனில் பொதுவாகவே எந்த வேலை செய்தாலும் EPF, ETF கொடுக்கப்பட வேண்டும் என்பது தொழில் சட்டமாகும். அது சாதாரணமாக எல்லோராலும் வழங்கப்படும் ஒரு விடயமாகும். சம்பள விடயம் பற்றி பேசும்போது இதைப் பற்றி பேசவேண்டிய அவசியம் இல்லை. அது இயல்பாகவே செலுத்தப்பட வேண்டிய நிதியாகும். அதனை வைத்துக்கொண்டு சம்பள பேச்சுவார்த்தையை பேசுவதில் அர்த்தமில்லை.

அதேநேரம் சம்பளம் பற்றி மாத்திரம் பேசுவதிலும் அர்த்தமில்லை. தோழிலாளர் ஒருவருக்கு குளவி கொட்டினால், பன்றி தாக்கினார் அவருடைய நலன்புரி தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு அவர்களுக்கு மருத்துவ விடுமுறை வழங்கப்படும்? அதேபோல் கர்ப்பிணி தாய்மார்கள், அவர்கள் பிரசவத்திற்குப் பின்னர் உடல்நிலை மோசமாக இருந்தாலும்கூட அவர்கள் வேலைக்கு செல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை வேலையை விட்டு நீக்கவிடுகிறார்கள். நீங்கள் வந்து பார்த்தால் தெரியும் வேலையிலிருந்து நீக்குவது என்பது மிகவும் சுலபமாகும். ஒருவர் தோட்டத்தில் ஒரு நிரந்தர ஊழியராக EPF இலக்கத்துடன் வேலை செய்து கொண்டிருப்பார். அவரை வேலையை விட்டு நீக்குவது சரியான சுலபமாகும். திடீரென வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள். சில சந்தர்ப்பத்தில் காலையில் சொல்வார்கள் உங்களுக்கு வேலை இல்லை, வேலையில் இருந்து நீக்கிவிட்டதாககூட கூறுவார்கள்.

ஒரு தொழிலை நம்பி இருப்பவர்களுக்கு அடுத்த நாள் காலையில் செல்லும்போது, அவர்களை வேலையை விட்டு நீக்கியதாக கூறினால், அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன?

அவர்கள் அதற்கான தொழில் திணைக்களத்திற்கோ அல்லது தொழிலாளர் நீதிமன்றத்திற்கு செல்வதானால், அதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதுவரையில் அவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன? ஆகவே, தொழில் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் உள்ளடங்கி சரியான முறையில் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். அந்தக் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையின் போது ஒரு தொழிற்சங்மாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எங்களுடைய ஆதரவு அவசியமாக இருந்தால் நாங்கள் எங்களுடைய ஆதரவை நிச்சயமாக வழங்குவோம்.

கேள்வி - நாளைய தினம் தான் இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெற இருக்கின்றது. இதற்கு நீங்கள் ஆதரவாக வழங்குவீர்களா? இல்லையா?

பதில் - பொதுவாகவே இந்த கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் சந்தர்ப்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான போராட்டங்கள் கண்டிப்பாக இடம்பெறும் ஒரு விடயமாகும். இந்த போராட்டத்தினால் பயன் கிடைக்குமாக இருந்தால், நிச்சயமாக சம்பள உயர்வு கிடைக்குமானால், அதேபோன்று நாம் கேட்கின்ற விடயங்கள் எல்லாம் நடைபெறும் அல்லது ஒரு அரை பகுதியாவது நடைபெறுமாக இருந்தால் நிச்சயமாக நாங்கள் ஆதரவு தருவோம். ஆனால் போராட்டம் என்பது நடைபெற்று வெறுமனே தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளத்தை இல்லாமல் செய்கின்ற ஒரு விடயமாக இருக்க கூடாது. இப்படி ஒரு போராட்டம் நடந்தால் ஒரு தொழிற்சங்கவாதியாக நாங்கள் நிச்சயமாக ஆதரவு தருவோம்.

கேள்வி - இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியளித்தவாறு 1,000 ரூபா சம்பளத்தை உரிய முறையில் பெற்றுக் கொடுக்காமல் முதலாளிமார் சம்மேளனத்துடன் உறுதியாக பேசாமல், தொழிலாளர்களை வீதிக்கு இறங்கி போராட்டம் செய்கின்றது என்ற ஒரு விமர்சனம் இருக்கின்றது. இவர்களின் நடத்தவிருக்கும் போராட்டம் நியாயமானதா? இந்த போராட்டத்தின் மூலம் பலன் கிடைக்குமா?

பதில் - நீங்கள் கூறுவது போன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை சரியாக ஈடுபடவில்லை என்று கூறுவதாக இருந்தால், ஏனைய தொழிற்சங்கங்கள் அதாவது இன்னும் பலமான தொழிற்சங்கங்கள் இங்கு இருக்கின்றன. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத ஏனைய தொழிற்சங்க இருக்கின்றன. கூட்டமைப்பாக கூட இருக்கின்றன. ஏன் ஒரு கூட்டு சம்மேளனமாக செல்ல முடியவில்லை. ஏன் இந்த கூட்டு ஒப்பந்தத்தில் தாங்களும் கைச்சாத்திடும் பங்குதாரராக வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த, உலக தொழிலாளர் ஸ்தாபனத்துடன் பேசி ஏன் அந்த நிலைக்கு அவர்கள் செல்ல முடியவில்லை? ஏன் கம்பனிகளுடன் பேசுவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் மூன்றாவது தரப்போவதாக சென்று கைச்சாத்திட்டு தொழிலாளர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை பெற்றுக் கொடுப்பதற்கான ஈடுபாட்டை ஏன் ஏனைய தொழிற்சங்கங்கள் காட்டவில்லை?

சம்பளப் பேச்சுவார்த்தையை பொறுத்தளவில் ஒவ்வொரு தொழிற்சங்கமும் மாறிமாறி குற்றஞ்சாட்டுவதே நடைபெறுகிறது. யார் சரி யார் பிழை என்பது என்னுடைய நிலைப்பாடு அல்ல. இரண்டு பக்கமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அவர்களுடைய கூட்டணியின் ஆட்சி நடைபெற்றபோது 50 ரூபா மேலதிக கொடுப்பனவைக்கூட பெற்றுக்கொடுக்கவில்லை. உங்களுடைய ஆட்சியில் செய்து இருக்கலாமே? அதேபோன்று உங்களது ஆட்சியைப் பயன்படுத்தி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு அதிகாரத்தை நீங்கள் பெற்றிருக்கலாமே?

கேள்வி - கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு தரப்பினரும், விலகக் கூடாது என்று ஒரு தரப்பினரும் கூறுகின்றார்கள். ஒரு சட்டத்தரணி என்ற அடிப்படையில் இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் - கூட்டு ஒப்பந்தம் என்பது ஒரு பலமாகும். தொழிலாளர் சட்டத்திலேயே கூட்டு ஒப்பந்தம் பற்றி சொல்லப்பட்டிருக்கின்றது. அது நல்லதொரு அம்சமாகும். நாள் சம்பளத்திற்கு வேலை செய்யும் தரப்பினருக்கு எந்த ஒரு தொழில் பாதுகாப்பும் இல்லை. இவ்வாறான நிலையில் இரு தரப்பினரும் இணைந்து பேசி, ஒரு ஒப்பந்தம் மேற்கொள்வது என்பது முக்கியமான ஒரு அம்சமாகும். ஆனால் அது சரியான முறையில் இடம்பெறுவதில்லை. அதிலிருந்து விலகி வெளியேறிவிட்டால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. தொழிலாளர்களே பாதிக்கப்படுவார்கள். ஆகவே ஒரு இடத்தில் இருக்கும் போது சரியான முறையில் பேசி தொழிலாளர்களுக்கு உரியதை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடு.

கேள்வி - சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1,000 ரூபாய் சம்பளத்தை வழங்கினால், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள ஏனைய நலன்புரி அம்சங்கள் தொடர்பில் ஒரு கூட்டு உடன்பாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு நடைமுறைக்கு சென்றால் அது நல்லதாக அமையுமா?

பதில் - சம்பள நிர்ணய சபையின் ஊடாக சம்பளத்தை தீர்மானிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எல்லா தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு எதையும் செய்ய முடியாது என்பதே என்னுடைய கருத்தாகும். ஏனெனில் தொழிலாளர்கள் எனும்போது அதிகமான வகைப்படுத்தலில் இருக்கின்றார்கள். அதாவது நமது நாட்டில் அதிகமான தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். அரசாங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும், எம்முடைய தொழிலாளர்களுக்கும் ஒரே சம்பளத்தை நிர்ணயிக்க முடியாது. சில தொழில்களில் தொழிலாளர்கள் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக ஒருநாளைக்கு வாங்குகிறவர்கள். அவர்களைப் போன்று எம்முடைய தொழிலாளர்களையும் கருதக்கூடாது. ஏனென்றால் எமது தொழிலாளர்கள் அதிகளவில் கஷ்டப்படுகிறவர்கள். களத்தில் நின்று வேலை செய்பவர்கள். பெண்கள் தேயிலை மலையில் ஏறி மிகவும் கஷ்டப்பட்டு கொழுந்து பறிக்கின்றார்கள். அந்த கஷ்டத்திற்கான சம்பளம் கிடைக்க வேண்டும். இது சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்டு சரியான முறையில் வழங்கப்படுமாக இருந்தால் அது நல்ல விடயமாகும். ஆனால்ஈ ஏனைய தொழிலாளர்களுடன் ஒப்பிட்டு இவ்வளவுதானே மற்றவர்களை கொடுக்கிறோம், அப்போது உங்களுக்கும் இவ்வளவு தான் என்று தீர்மானிக்க முடியாது.
- என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image