துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

துறைமுக தொழிற்சங்கங்கள் இன்று முதல் சட்டப்படி வேலை

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் கையாளுகை நடவடிக்கையில், 49 சதவீத உரிமத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டுள்ளவாறு இன்றைய தினம் (29) முதல் துறைமுக ஊழியர்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்கான தேசிய திட்டத்தின் உறுப்பினர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்றையதினம் (28) கண்டிக்கு சென்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை துறைமுக பொது ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகானகே,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பாதுகாப்பதற்காக விசேடமாக நாளையதினம் (இன்று) சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை நாங்கள் ஆரம்பிக்க இருக்கின்றோம். அதற்கு முன்னதாக மாநாயக்கர்களின் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. கிழக்கு முனையம் தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமை தொடர்பில் அவர்களுக்கு நாங்கள் தெளிவுபடுத்தினோம். எமது நாட்டின் வளங்கள் இவ்வாறாக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றமை என்பது தொடர்பில் அவர்கள் புதுமை அடைந்தார்கள்.

இந்த நிலையில், அவர்கள் தங்கள் தரப்பு தலையீட்டை செய்வார்கள் என கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் சார்பாக நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய போராட்டத்தில் 9,900 துறைமுக ஊழியர்கள் நாளைய தினம் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் பங்களிப்பு செய்ய உள்ளதாக நிரோஷன் கொரகானகே குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தப் போராட்டத்தில் பரந்துபட்ட ரீதியில் தேசிய அமைப்புகள் ஒன்றிணையும் என நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றோம். அரசியல் கட்சிகளும் இதில் இணைந்துள்ளன. இந்த அனைத்து தரப்பினது ஆதரவும் இந்த போராட்டத்திற்கு இருக்கின்றது. கிழக்கு முனையத்தை நாங்கள் கட்டாயமாக பாதுகாக்க வேண்டும். இது தேசிய போராட்டமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், துறைமுக தொழிற்சங்கததினர், அஸ்கிரிய பீடத்தின் நாரம்பணாவே ஆனந்த தேரரை சந்தித்து ஆசி பெற்றதுடன், கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை துறைமுக அதிகார சபையின் ஊடாக கையாளுவதற்கான யோசனை திட்டத்தையும் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள வணிக கைத்தொழில் மற்றும் சேவை மேம்பாட்டு ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஷ்யாமல் சுமனரத்ன, இதனை அதானி நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியா எங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு அவசியமான பொருளாதார மையம் வீணாகும் நிலைமையை இதனூடாக நடக்கும். இந்த நிலையில் துறைமுகத்தின் 23 தொழிற்சங்கங்கள் ஒருமனதாக கிழக்கு முனையத்தை மீட்டெடுப்பதற்காக இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்துள்ள அஸ்கிரிய பீடத்தின் நாரம்பணாவே ஆனந்த தேரர், ஆட்சியாளர்கள் நாட்டின் நலனுக்காக வேலை செய்வதற்காகவே நாட்டு மக்கள் வாக்களிக்கிறார்கள் தவிர, எதையாவது செய்து இருக்கின்றதை விற்பனை செய்து, குறித்த காலத்தில் அரசாங்கத்தை முன்னெடுப்பதற்காக அல்ல என்று கூறியுள்ளார். உண்மையில் இந்த விடயத்தில் எங்களுக்கு ஆழ்ந்த கவலை உள்ளது. நாங்களும் அந்த நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image