இலங்கைக்கு வந்த உக்ரேன் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு வந்த உக்ரேன் சுற்றுலா பயணிகள்

விமான நிலையங்களை மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கும் முன்னோட்ட வேலைத்திட்டம் இன்று ஆரம்பமானது. இதற்கமைய, இன்று உக்ரேனின் கியுவ் நகரிலிருந்து 186 பயணிகளுடன் இலங்கைக்கு வந்த PQ 555 ரக விமானம் மத்தள விமான நிலையத்தில் பிற்பகல் 2.30  மணியளவில் தரை இறங்கியது.

 

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஏ சந்ரசிறி ஆகியோரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி இலங்கையின் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த ஒன்பது மாதங்களில் எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைதரவில்லை. பயணிகள் பரிமாற்றம், பண்டங்களை எடுத்துச் செல்லல், வெளிநாடுகளில் பணியாற்றிய தொழிலாளர்களை அழைத்துவருதல் போன்ற நடவடிக்கைகளுக்காக மாத்திரமே கடந்த ஒன்பது மாதங்களில் விமான நிலையங்கள் பயன்படுத்தப்பட்டன. சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் முப்பது லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டார்கள். இந்த விடயத்தைக் கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்ய பிராந்தியத்துடன் தொடர்புடைய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் சமர்ப்பித்திருந்தார்கள். இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருந்தது. இந்த நடவடிக்கை கடந்த காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொரோனா அலையின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சர் தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விமான நிலையங்களை சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வருவதற்கான விசாவை பெற்றுக் கொள்வது முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் தாய்நாடு திரும்பும் வரையிலான காலப்பகுதியில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய கோவையொன்றை சுகாதாரத்துறையினர் தயாரித்துள்ளார்கள். இலங்கை வந்த உக்ரேன் சுற்றுலாப் பயணிகளிடம் 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்கள் ஹொட்டல்களில் தங்குவதற்கு முன்னரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருக்கிறார்கள். அவர்கள் பத்து நாட்கள் இலங்கையில் தங்கவிருக்கிறார்கள். இந்த சுற்றுலாப் பயணிகள் கொக்கல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல்களில் தங்கவுள்ளதோடு, அவர்களுக்கு பொதுமக்கள் உள்ள பகுதிகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது. சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் முன்னோட்ட நடவடிக்கை அடுத்த மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. ரஷ்ய பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து இரண்டாயிரத்து 580 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வரவிருப்பதாக மத்தள விமான நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த விடயங்கள் பற்றி ஆராய்ந்து குறைபாடுகளை திருத்தி அமைத்து, அடுத்த வார இறுதியில் விமான நிலையங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

மூலம் : News.lk

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image