2 நாள் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கை

2 நாள் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கை
தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடர்பான ஊடக அறிக்கை ஒன்றை வட வடமாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
 
நாட்டில் 2019இன் பின்னரான காலப்பகுதியில் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளினது விலைகள் பலமடங்கு உயந்துள்ளமையினால் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைச் செலவுகளும் பலமடங்கு அதிகரித்துள்ளதுள்ளமை யாவரும் அறிந்தவொன்று. இவ் வாழ்க்கை செலவு அதிகரிப்பினாலும், கால ஓட்டத்தோடு எமது நாட்டில் ஏற்படும்  இயல்பான பணவீக்க அதிகரிப்பாலும் அரச துறை மற்றும் அரச மருவிய துறைகளைச் சார்ந்த பணியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

 வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பளம் உட்பட்ட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை.
 நீண்டகாலமாக நிலவிவரும் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படவில்லை.
 ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பள அதிகரிப்புக்கள் கூட வழங்கப்படவில்லை.
 2019இலிருந்து பெரும்பாலான ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.
 தொழில் சார் உரிமைகள் மற்றும் சலுகைகள் தொடர்பிலான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் இல்லை.
 
மேற்கூறப்பட்ட பொதுவான பிரச்சினைகளுக்கும் தத்தம் துறைசார் பிரச்சனைகளுக்கும் தீர்வு வேண்டி நாட்டில் உள்ள தொழிற்சங்கங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்துகின்றன மற்றும் நடாத்தவுள்ளன.
இவ்வாறான போராட்டங்களில் ஒன்றே எமது வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளன அங்கத்துவச் சங்கங்களில் ஒன்றான யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமானது அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஏனைய கல்விசாரா தொழிற்சங்கங்களுடன் இணைந்து இரண்டு மாதத்திற்கு மேற்பட்ட காலமாக நடாத்தி வரும் போராட்டமாகும்
 
வரும் 08யூலை மற்றும் 09யூலை திகதிகளில் பின்வரும் எமது அங்கத்துவச் சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தமது துறை சார் சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்கப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளன.
 
 வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
 அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
 பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம்
 அகில இலங்கை தமிழ் பேசும் தபால் ஊழியர் சங்கம்
 ஸ்ரீலங்கா தபால் தொலைத் தொடர்புசேவை உத்தியோகத்தர் சங்கம்
 அகில இலங்கை உபதபால் அத்தியட்சகர் சங்கம்

இவர்கள் உட்பட போராட்டத்தினை முன்னெடுக்கும் அனைத்து தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் அரசினலும் உரிய தரப்புக்களினாலும் சாதகமாக அணுகப்பட்டு விரைவாக தீர்வுகள் வழங்கப்படுவதன் மூலமே அவர்கள் சுமுகமான முறையில் பணியாற்றவும், மக்களுக்கு சேவையாற்றவும் வழியேற்படுத்த முடியும்  என்பதை எமதுவடபிரதேச தொழிற்சங்களின் சம்மேளனம் இத்தருணத்தில் வலியுறுத்துவதுடன், தொழிற்சங்கங்களால் முன்னெடுக்கப்படும் நியாயமான போராட்டங்களிற்கு தார்மீக ஆதரவினையும் வழங்கி நிற்கின்றது.

நாடு பொருளாதார நெருக்கடியில் உள்ளபோது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களில் சிக்கித் தவிக்கும் போது இவர்களின் நிதிசார் கோரிக்கைகள் நியாயமற்றது என அரசும் அரசின் கட்டமைப்புக்களும் கூறலாம். ஆனால் இதே அரசும் அரசின் கட்டமைப்புக்களும் ஒரு சில துறை சார்ந்தோருக்கு மட்டும் நிதிசார் அதிகரிப்புக்களை இதே காலகட்டத்தில் வழங்கியுள்ளன மற்றும் வழங்கி வருகின்றன என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியது.

இது எவ்வாறு சாத்தியமாயிற்று? பொருளாதார நெருக்கடியால் உண்மையில் எவருக்குமே நிதிசார் அதிகரிப்புக்கள் வழங்கப்படவில்லை யென்றால்  அரசின் கூற்று நியாயமானதெனலாம். ஆனால் அவ்வாறில்லாமல் தமது ஆட்சிக்கு வெளிநாட்டு சக்திகள் ஊடாக அழுத்தம் தரவல்ல நாட்டின் மேலாதிக்க அழுத்த சக்திகளை திருப்திப்படுத்தும் முகமாக ஒரு சாராருக்கு மட்டும் சம்பள அதிகரிப்பு வழங்குவதனூடாக ஏற்கனவே உள்ள வாழ்க்கை தர ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் பாரபட்சமான செயற்பாடுகளை எம்மால் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அத்துடன் காலங்காலமாக ஆட்சியதிகாரங்களில் இருந்தோரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களினாலும் தமது சுயலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அதிகார முறைகேடுகளினாலும் ஏற்பட்ட விளைவுகளிற்கு உரிய விசாரணைகளை முன்னெடுத்து மாற்றுத் தீர்வுகளை முன்னெடுக்காமல், உரியவர்களைத் தண்டிக்காமல், மக்கள் சொத்துக்களான அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் அல்லது தனியாருக்கு விற்பது ஒரு தீர்வாகாது. இது சட்டியிலிலிருந்து அடுப்பில் விழுந்த கதையாக மறுபடியும் ஊழல் அரசியல்வாதிகள் பயனடையவே வாய்ப்பளிக்கும் என்பதோடு நீண்டகால நோக்கில் மக்கள் நலன்கள் பாதிக்கப்படும் என்பதையும் இங்கு ஆணித்தரமாக பதிவிட விரும்புகின்றோம்.

• வடமாகாண சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் சங்கம்
• வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
• வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்கம்
• வடமாகாண கால்நடை போதானாசிரியர் சங்கம்
• வடமாகாண அரச சாரதிகள் சங்கம்
• வடமாகாண அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம்
• பொது முகாமைத்துவ உதவியாளர் சேவைச் சங்கம்
• அகில இலங்கை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
• அகில இலங்கை தமிழ் பேசும் தபால் ஊழியர் சங்கம்
• ஸ்ரீலங்கா தபால் தொலைத் தொடர்புசேவை உத்தியோகத்தர் சங்கம்
• பல்கலைக்கழக ஊழியர் சங்கம், யாழ் பல்கலைக்கழகம்
• அகில இலங்கை உபதபால் அத்தியட்சகர் சங்கம்

  சி.சத்தியேந்திரா
செயலாளர்
தொழிற்சங்கங்களின் சம்மேளனம் - வடமாகாணம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image