சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள 5 இலட்சம் இரண்டாவது தொகுதி “சைனோபாம்” தடுப்பூசிகளை இன்று முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் சுகாதார துறைகளின் பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளித்து, நாட்டின் சில மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
5 இலட்சம் தடுப்பூசிகளுடன் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.869 விமானம் இன்று (26) அதிகாலை 12.05க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ சென் ஹொன் (Qi Zhen Hon) ஆல், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியிடம் தடுப்பூசிகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சீன அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பெறுபேறாக இந்த இரண்டாவது தடுப்பூசிகள் தொகுதி இலங்கைக்கு அன்பளிப்பாக கிடைக்கப்பெற்றுள்ளது. அரசாங்கம் கொள்வனவு செய்வதற்காக கோரியுள்ள மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகளை இன்னுமொரு மாதத்திற்குள் வழங்கவும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை அன்பளிப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.