11 மாதங்களாக கல்வி அமைச்சர் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை

11 மாதங்களாக கல்வி அமைச்சர் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை
கல்வி அமைச்சராக பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் பதவியேற்று பதினொரு மாதங்கள் கடந்துள்ள நிலையில், கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தங்களுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தல் விதிமுறையை மீறி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப்பட்டமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து முன்னெடுக்கும் இணையவழி கற்பித்தல் பணிகளில் இருந்து விலகுவதற்கும் கடந்த 12ஆம திகதி தீர்மானிக்கப்பட்டது. இந்த போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தொலைக்காட்சிகளில் வந்து கூறுகின்றார். அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்களும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்குமாறு தொடர்ச்சியாக கூறுகின்றனர். நாங்கள் வீதியிலா பேச்சுவார்த்தை நடத்துவோம்? நாங்கள் எங்கே பேச்சுவார்த்தை நடத்துவது? எந்த ஒரு பேச்சுவார்த்தையும் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

அமைச்சர் பீரிஸ் இந்த மாதம் 20ஆம் திகதி ஆகும்போது கல்வி அமைச்சராக பதவி ஏற்று 11 மாதங்கள் ஆகின்றன. இந்த 11 மாதங்களில் ஒரு வார்த்தைக் கூட அவர் எம்முடன் பேசவில்லை. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. வீழ்ச்சியடைந்த கல்வி குறித்து தொழிற்சங்கங்களுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

16 மாதங்களாக மாணவர்கள் கல்வியில் இருந்து வெளியே தள்ளப் பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களுக்கு கிடைக்கும் மிகக்குறைந்த சம்பளத்தில் இந்த இணையவழி கற்பித்தலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடந்த 12ஆம் திகதி முதல் இணையவழி கற்பித்தல் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

அரசாங்கம் தமது அடக்குமுறைகளில் இருந்து தற்போது பின்வாங்கியுள்ளது. போராட்டங்களை போன்று இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு இதற்கு பெருமளவு பங்களிப்புச் செய்தது. இந்நிலையில் நாளை (இன்று) முதல் பிரதேச மட்டங்களில் மீண்டும் போராட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாளை (இன்று) எங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படும் என்பது குறித்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் எதிர்வரும் 22ஆம் திகதி நாங்கள் கொழும்பில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். கொழும்புக்கு வந்து நாங்கள் எங்களது அடுத்த சவாலை கொடுக்க உள்ளோம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image