11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

நிகழ்நிலை கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.


இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

2020 மார்ச் 12 ஆம் திகதி தொடக்கம் கொரோனா நோய் பரவல் காரணமாக பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலைமை ஒரு வருடமும் 3 மாதங்களும் கடந்த நிலையில் தொலைக்கல்வி முறைகள் பல காணப்பட்ட போதும் கொவிட்-19 நிலைமைக்குள் பாதிக்கப்பட்ட பாடசாலைக் கல்வியைக் கொண்டு செல்வதற்கு அரசாங்கத்தின் ஒரே தீர்வாக காணப்படுவது நிகழ்நிலை (online) கற்பித்தலே.

எனினும் கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகள் மூலம் நிகழ்நிலை (online) கற்பித்தலுக்கு தேவையான கருவிகள் மற்றும் டேட்டா (data) போன்ற எவ்வித வசதிகளும் ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்து தரப்படாத நிலையில் தற்போது நடைபெறுகின்ற நிகழ்நிலை கற்பித்தலுக்கு தேவையான செலவுகளை ஆசிரியர்களே சுயமாக மேற்கொள்கின்றார்கள். எனினும் இம்முறையின் மூலம் 60 வீதத்திற்கு அதிகமான மாணவர்கள் பாதிப்படைகின்றனர்.

இந்நிலைமையில் கல்வி அமைச்சு, மாகாண மற்றும் வலய கல்வி பணிமனைகள் மூலமாக ஆசிரியர்கள் சுயமாக மேற்கொள்ளும் நிகழ்நிலை கல்வி செயற்பாடுகளை மேற்பார்வை செய்து வருகின்றன.

ஆசிரியர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அவர்கள் சுயமாக முன்வந்து செய்யும் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

மேலும் சில வலய கல்விப் பணிமனைகள் நிகழ்நிலை கல்வி தொடர்பாக ஆசிரியர்களுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகின்றன. அநேகமான மாணவர்கள் நிகழ்நிலை கற்றலில் பங்கு பற்றாத போதிலும் அவ்வாறான மாணவர்களை எப்படியாவது பங்குபெறச் செய்யுமாறு வலய கல்விப் பணிமனைகள் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.

அதிபர்கள், ஆசியர்கள் ஆகிய நாம் இந்த அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் சுயமாக மேற்கொள்ளும் சேவைகளை கண்காணிப்பு செய்ய இடம்கொடுக்காமல் இருக்குமாறு அனைத்து ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எவ்வித வசதிகளையும் வழங்காமல் நிகழ்நிலை கற்றலுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதையும், மேற்பார்வை செய்வதையும் உடன் நிறுத்துமாறு கல்வி அதிகாரிகளை கேட்டுக் கொள்வதோடு, கடமையோடு தொடர்புபடாத சுயமாக கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களை நாம் கேட்டுக் கொள்வது இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய வேண்டாம் என்பதே ஆகும்.

இந்த அறிக்கையில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளதோடு இலங்கையில் உள்ள பல முன்னணி ஆசிரியர் சங்கங்கள் இணைந்து இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image