தலவாக்கலையில் 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் 100 கோடி ரூபாவை மோசடி செய்துள்ளதாக CID இல் முறைப்பாடு

தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 11 கிராமிய வங்கிகள் தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் ரூபா 100 கோடிக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையம் குற்றப்புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளது.
ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து 30% முன்கூட்டிய பணத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்து, தலவாக்கலை பலநோக்குச் சேவை கூட்டுறவு சங்கத்துடன் தொடர்புடைய 11 கிராமிய வங்கிகள் மூலம், 5000க்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ரூபாய் 100 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக தோட்டத் தொழிலாளர் மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் மாக்ஸ் பிரபாஹர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு புகார் அளித்துள்ளனர்.
மேலும், அவர் கூறுகையில், தலவாக்கலை பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான வங்கிகள் தலவாக்கலை நகரை அண்டிய தோட்டத் தொழிலாளர்கள், தரகுக்கார்களின் மூலம் அழைத்து வரப்பட்டு கிராமிய வங்கி அதிகாரிகள் மூலம் வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு, சிறிய கடன் தொகை வழங்கப்பட்டதாகவும், பின்னர் ஊழியர் நலன்புரி நிதியின் 30% முன்கூட்டிய தொகையை பெறுவதற்காக, முந்தைய தேதியிடப்பட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, அந்தத் தொழிலாளரின் கணக்கில் கடன் தொகைக்கு சமமான பணம் வரவு வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின், ஊழியர் நலன்புரி நிதியிலிருந்து காசோலை மூலம் பணம் வங்கிக்கு அனுப்பப்பட்டதும், முழு தொகைக்கு அதிகமான வட்டி கட்டாயமாக பிடித்துக் கொள்ளப்பட்டு, தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையின் வட்டி மட்டும் குறைக்கப்பட்டு, மீதமான தொகை வங்கி அதிகாரிகளால் பங்கிட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் புகார் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நிதி கொடுக்கல் வாங்கல்களுக்கான கணக்கு விவரங்கள், பிடித்த தொகையை உறுதிப்படுத்தும் வங்கி புத்தகம், ரசீதுகள் அல்லது வேறு எந்த ஆவணங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த மோசடி, தலவாக்கலை பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் குழுவின் நேரடி ஒத்துழைப்புடன் நடைபெற்றதாகத் தெரிகிறது. எனவே, அரசு நிதி மோசடியை அம்பலப்படுத்தி உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு, கடந்த 7ஆம் தேதி தங்களது அமைப்பு CID, ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்துக்கு முறையிட்டதாக அவர் மேலும் கூறினார்.
குறிப்பு :
உங்கள் பிரதேசங்களில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் எவரும் இருப்பின் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள்
0759583593
0779583593
0789583593