1,000 ரூபா சம்பள உயர்வு தீர்மானத்தை உறுதிப்படுத்தியது சம்பள நிர்ணய சபை

1,000 ரூபா சம்பள உயர்வு தீர்மானத்தை உறுதிப்படுத்தியது சம்பள நிர்ணய சபை
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்க, கடந்த மாதம் 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்று சம்பள நிர்ணய சபையினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பள நிர்ணய சபை இன்று மீண்டும் கூடியது. இதன்போது  தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளும், அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகளும் பங்கேற்று உள்ளனர்.
 
இந்த நிலை இன்றைய தினம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கான தீர்மானம் உறுதி செய்யப்பட்டதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
 
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 100 ரூபாய் என மொத்தமாக 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க கடந்த 8ஆம் திகதி கூடிய சம்பள நிர்ணய சபை தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
 
இந்த தீர்மானத்தை உறுதி செய்வதற்காக கடந்த மாதம் 19ஆம் திகதி சம்பள நிர்ணய சபை மீண்டும் கூடியபோதும், கம்பனிகளின் சார்பில் ஒரே ஒரு பிரதிநிதி மாத்திரம் கலந்து கொண்டிருந்தமையால், கூட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை இல்லாததன் காரணமாக அன்றைய கூட்டம், இன்று மார்ச் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டது. இதன்படி இன்றைய தினம் தொழில் அமைச்சின் கூட்டம் இடம்பெற்றது.
 
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், 
 
குறித்த தீர்மானத்திற்கு எதிராக  முன்வைக்கப்பட்டிருந்த ஆட்சேபனைகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டு, அந்த தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கம்பனிகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெரும்பான்மையினரின் இணக்கப்பாட்டுடன் அந்த தீர்மானம் உறுதிசெய்யப்பட்டது. 
 
இந்த தீர்மானம் அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு அவரின் அனுமதி கிடைத்ததன் பின்னர், வர்த்தமானியில் அறிவிக்கப்படும்.  வர்த்தமானி அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் - என்றார்.
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image