சிறிமா - சாஸ்திரி ஒப்பந்த நாள் இன்று

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்த நாள் இன்று

இலங்கையின் மலையக தமிழர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தும் சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கையெழுத்தான தினம் (30.10.1964). இன்றாகும்.

இந்த ஒப்பந்தமானது ஸ்ரீமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம், இந்தோ - சிலோன் ஒப்பந்தம் மற்றும் பண்டாரநாயக்க - சாஸ்திரி ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் இந்தியாவின் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையே கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது, 30 ஒக்டோபர் 1964 அன்று, அதிகாரப்பூர்வமாக, இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரஜைகளுக்கான ஒப்பந்தம் என்று அறியப்பட்டது. இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் நிலை மற்றும் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் இந்த ஒப்பந்தமானது பெரும் தாக்கத்தை இன்று வரை செலுத்தி வருகின்றது.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இலங்கையின் கோப்பி, தேயிலை தோட்டங்களில் தொழில் புரிவதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் 1823ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த தொடர்ச்சியான அழைத்து வரப்படல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சியின் காரணமாக, 1921 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மக்கள்தொகையில் 13.5 சதவிகிதம் (602,700) இந்தியத் தமிழர்கள் இருந்தனர் என தகவவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 1936 ஆம் ஆண்டில், இந்தியத் தமிழர்கள் 1,123,000 ஆக இருந்தனர், இது மொத்த இலங்கையின் மக்கள் தொகையில் 15.3 சதவிகிதம் எனவும் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையின் சிங்களத் தேசியவாதிகள் மலையக தமிழ் மக்கள் தொகை வளர்ச்சியைக் கண்டு ஏற்பட்ட கலக்கம் காரணமாக அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இலங்கைக் குடியுரிமைச் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டம் 1948 இல் நடைமுறைக்கு வந்தது, இந்த சட்டமூலத்தின் மூலம் சுமார் 5,000 இந்திய தமிழர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கி வைக்கப்பட்டாலும் சுமார் 700,000 க்கும் (சுமார் 11%) அதிகமான மலையக தமிழ் மக்கள் இலங்கையின் குடிமக்கள் அல்லாதவர்கள் அல்லது நாடற்றவர்களாக இருந்தனர்.

மேலும் 1954 இல், இதே பிரச்சினையை தீர்க்க நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆயினும் கூட, பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தது. 1962 இல், ஏறக்குறைய 975,000 இந்திய பிரஜைகள் சிலோன் மற்றும் இந்தியாவால் நாடற்றவர்கள் என சுட்டிக்காட்டப்பட்டனர்.
1964 இல், இரு நாடுகளும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களைக் கொண்டிருந்தன, மேலும் ஒரு புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. பேச்சுவார்த்தைகள் ஆரம்பத்தில் நான்கு நாட்கள் நீடிக்கும் என்று திட்டமிடப்பட்டது, ஆனால் இறுதியில் ஆறு நாட்கள் ஆனது. பல சந்தர்ப்பங்களில் குறித்த பேச்சவார்த்தை தோல்வியடையும் நிலையையும் எட்டிய போதும் இறுதியாக, இரு நாடுகளும் ஒரு உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டன,

இதனை தொடர்ந்து 1981 இல், 280,000 பேர் மட்டுமே இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மதிப்பிடப்பட்டது, மேலும் 160,000 பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. இந்திய குடியுரிமை வழங்குவதிலும், திருப்பி அனுப்பப்படுவதிலும் இந்தியா தாமதமானது. 1982 இல், ஒப்பந்தத்தின் அமுலாக்க காலம் முடிந்து விட்டதால், ஒப்பந்தத்தை இனி கருத்தில் கொள்ள முடியாது என்று இந்தியா அறிவித்தது. அத்தோடு இலங்கை உள்நாட்டுப் போரின் காரணமாக 1984 இல், இரு நாடுகளுக்கும் இடையிலான படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக இந்தியாவுக்கான திருப்பி அனுப்பப்படுவது தடைப்பட்டது.

ஒக்டோபர் 1964 இல் சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கையின் படி இலங்கையில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு 2003 இல் இலங்கை குடியுரிமை வழங்கியதன் மூலம் இலங்கையில் உள்ள இந்தியத் தமிழர்களிடையே இருந்த நாடற்றவர் பிரச்சினை இறுதியாக் தீர்க்கப்பட்டது.

மூலம் விக்கிப்பீடியா, படம் கூகுள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image