1000 ரூபா நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து நிம்மதியாக சம்பளம் பெறவில்லை
ரூபா 1000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதில் இருந்து தாம் நிம்மதியாக சம்பளம் பெற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்த கொட்டகலை டிரேட்டன் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் இதுவரை பறித்த 17 கிலோ தேயிலையே தொடர்ந்தும் பறிக்க முடியும். முகாமைத்துவம் கோரியது போன்று 20 கிலோகிராம் தேயிலை தம்மால் பறிக்க முடியாது என கூறி கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் டிரேட்டன் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (21) திங்கட்கிழமை காலை முன்னெடுத்தனர்.
டிரேட்டன் பிரிவு விளையாட்டு மைதானத்தில் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிவரை இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
தோட்டத்தில் பணிபுரியும் ஆண் மற்றம் பெண் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் இணைந்திருந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றி இவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ரூபா 750 சம்பளம் பெற்ற போது தாம் 17 கிலோகிராம் தேயிலை பறித்ததாகவும் தற்போது ரூபா 1000 சம்பளம் வர்த்தமானியில் அறிவித்த பிறகு தம்மை 20 கிலோகிராம் தேயிலை பறிக்க கூறுவதை தம்மால் ஏற்றக் கொள்ள முடியாது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தாம் 20 கிலோகிராமிற்கு குறைவான தேயிலை பறிக்கும் நிலையில் தமக்கு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மாத்திரமே தொழில் வழங்கப்பட முடியும் என்று முகாமை அறிவுறுத்தியதை தம்மால் ஏற்றக் கொள்ள முடியாது என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்று நாள் தொழில் செய்து தமது பிள்ளைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்று இவர்கள் ஆதங்கத்தை வெளியிட்டனர்.
அத்துடன் தாம் தினமும் சம்பளத்திற்கு பறிக்கும் கொழுந்திற்கு மேலதிகமாக 12 கிலோகிராம் தேயிலை கொழுந்து தம்மிடம் பிடிக்கப்படுவதாகவும் அவ்வாறானால் தாம் தினமும் ரூபா 1000 சம்பளத்திற்கு 32 கிலோகிராம் தேயிலை பறிக்க வேண்டியுள்ளதாகவம் இவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பெயர் பதியாது கைகாசிற்கு தொழில் புரியும் தமக்கு ஒரு கிலோ தேயிலைக்கு ரூபா 40 தரப்படுகின்றது. இது தமக்கு போதாது இந்த ரூபா 1000 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டதன் பின்னர் தாம் நிம்மதியாக சம்பளம் பெற்றுக் கொண்டதே இல்லை தொடர்ந்து போராட்டமாகவே உள்ளதாக போராட்டத்தில் பங்குபற்றிய பெண் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
எமக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலையும் 17 கிலோகிராமிற்கு ரூபா 1000 சம்பளமும் வழங்க இந்த முகாமையாளர் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்த முகாமையாளர் எமக்கு வேண்டாம் என்பதே ஒட்டு மொத்த தொழிலாளர்களினதும் கோரிக்கையாக இருந்தது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 300ற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இவ்விடயம் சம்பந்தமாக தோட்ட முகாமையளரிடம் வினவியபோது தற்போதய பொருளாதார நிலையில் ஒரு தொழிலாளி 20 கிலோகிராம் தேயிலை பறிக்கா விட்டால் தோட்டங்களை கொண்டு நடாத்துவது மிக சிரமமான காரியமாக அமைந்து உள்ளதாலேயே தாம் 20கிலோகிராம் தேயிலை கேட்பதாக கூறினார்.
மேலும் டிரேட்டன் தோட்டத்தில் தற்போதய நிலையில் 20கிலோகிராம் தேயிலை பறிப்பது முடியுமான விடயம் என்றும் வரட்சி மற்றும் தேயிலை கொழுந்து இல்லாத காலங்களில் 20கிலோகிராமிற்கு குறைவான தேயிலைக் கொழுந்து பறித்தாலும் தாம் முழுமையான சம்பளத்தை வழங்குவதாகவும் தெரிவித்தார்