மூன்று மாத சந்தாப்பணம் இல்லை: சிரமத்தில் தொழிற்சங்கங்கள்

மூன்று மாத சந்தாப்பணம் இல்லை: சிரமத்தில் தொழிற்சங்கங்கள்

கடந்த மூன்று மாத காலமாக தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை அனுப்பாமல் உள்ளதால் தொழிற்சங்கங்களை நடத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தல் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதை ஆட்சேபித்து தோட்டக் கம்பனிகள் வழக்குத் தாக்கல் செய்திருந்தன. சம்பள நிர்ணய சபை தலையீடு செய்துள்ளதால் தமக்கும் கூட்டு ஒப்பந்தத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு காலாவதியாவதாகத் தெரிவித்து, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து வழமையாக கழித்து அனுப்புகின்ற சந்தாப் பணத்தையும் நிர்வாகங்கள் அனுப்பாமல் இருந்தன.

கம்பனிகள் தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொரோனா சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால், கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாத இக்கட்டான சூழ்நிலை தோன்றியுள்ளது. அத்தோடு இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்குரிய சந்தாப்பணம் வந்து சேராததால் தொழிற்சங்கங்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன.

தொழிற்சங்கக் கட்டிடங்களுக்கு வாடகை செலுத்துதல், கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குதல், குடிநீர், மின்சாரக் கட்டணங்களை செலுத்துதல் உட்பட பல்வேறு அத்தியாவசியப் பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. தொழிற்சங்கங்களில் கடமை புரியும் ஆயிரக்கணக்கான உத்தியோகத்தர்கள் சந்தாப் பணத்தின் மூலமே வேதனம் பெற்று வருகின்றார்கள். இதை நம்பித்தான் நூற்றுக் கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

கடந்த மூன்று மாத காலமாக ஓரளவு சமாளித்துக் கொண்டு வந்தாலும், நிலைமை நீடிக்கும் பட்சத்தில் பெரும் சிக்கலுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும். தொழிற்சங்கத்தை நம்பி வாழ்கின்ற உத்தியோகத்தர்கள் தமது குடும்பங்களை நடத்த முடியாமல் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட 1000 ரூபா சம்பள உயர்வை முழுமையாக அனுபவிக்க முடியாத துரதிஷ்டசாலிகளாகவும் தொழிலாளர்கள் இருகின்றார்கள். ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்க வேண்டுமானால் 20 கிலோ கொழுந்து கட்டாயம் பறிக்கப்பட வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அதற்குக் குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 50 ரூபா என்ற அடிப்படையிலே கொடுப்பனவு வழங்கப்பட்டு வருவதோடு, ஒரு வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே வேலை வழங்கி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கப்பட்டு வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தாலும் தற்போது தொழிலாளர்கள் படுகின்ற கஷ்டங்களை நீக்குவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் போதிய வருமானம் இன்றி துயரங்களை அனுபவித்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு விமோசனத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image