இலங்கை அரசாங்கம் C190 பிரகடனத்தை உள்நாட்டு சட்டத்தில் ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் எ.சி.ஆர் ஜோன்.
தொழில் புரியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராகவே உலக தொழிலாளர் தாபனத்தின் 190வது பிரகடனம் (C.190) 2019ம் ஆண்டு ஜுலை மாதம் 25ம் திகதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. சர்வதேச ரீதியில் தொழிலில் புரியும் பெண்கள் பல்வேறு வன்முறைகள், துன்முபுறுத்தல்கள், அடக்குமுறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். எனவே இவற்றில் இருந்து பெண்கள் முழுமையாக விடுபடவேண்டும் என்ற நோக்குடனேயே இப்பிரகடனம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்பிரகடனத்தின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், இதில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் தங்கள் உள்நாட்டு சட்டத்திற்குள் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதுடன் இதனை அமுல்படுத்தும் பொறிமுறைகளையும் வகுக்கவேண்டும். இலங்கை நாட்டை பொருத்தவரையில் பெருந்தோட்ட துறை, ஆடை தொழிற்சாலைகள், வெளி நாடுகள் மற்றும் உள்நாட்டிலும் வீட்டு வேலைகளில் அதிகளவான பெண்களே ஈடுபடுகின்றனர். இவ்வாறன தொழிற்றுறைகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பினை செய்கின்றன. இருந்தும் இங்கு வாழும் பெண்களே பல்வேறு வகையான வன்முறைகளுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகின்றனர்.
குறிப்பாக வீட்டு வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு தொழில் ஒப்பந்தம் மற்றும் தொழில் பாதுகாப்புக்கள் இல்லை. மேலும் உறுதி செய்யப்பட்ட தொழில் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. பெருந்தோட்ட தொழில் துறையில் 55 வீதத்திற்கு மேல் பெண் தொழிலாளர்களே தொழில் புரிகின்ற போதும் பெண்கள் பல்வேறு சுரண்டல்களுக்கு உள்ளாகின்றனர். தொழிற்சங்க தலைமைத்துவத்தில் இவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் தொழிற் படையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற பெண்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் நாட்டின் நிலையான அபிவிருத்தியினை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் இந்த ஊ.190 பிரகடனத்தினை உள்நாட்டு சட்டத்தில் அங்கிகரித்து இதனை அமுல்படுத்துவதற்கான உரிய பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்..