பட்டதாரிகள் ஏன் இன்னும் சேவையில் இணைக்கப்படவில்லை?

பட்டதாரிகள் ஏன் இன்னும் சேவையில் இணைக்கப்படவில்லை?

பாடசாலைகளில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. அவ்விடங்களுக்கு ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டபோதிலும் அதற்கான நடவடிக்கை எடுக்க ஊவா மாகாணம் தவறியுள்ளது என ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அழைப்பாளர் சுமித் சஞ்சீவ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தோர் சங்கம், HNDE டிப்ளோமாதாரிகள் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் என்பன இணைந்து நேற்று (07) வெல்லவாய பிரதேசத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் ஊவா மாகாணத்தில் அடுத்தடுத்து 4 ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பாடசாலை வெற்றிடங்களில் இணைக்குமாறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஊவா மாகாணத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதன் காரணமாக ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் மற்றும் தேசிய உயர் டிப்ளோமாதாரிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 4 ஆளுநர்கள் மாறும் வரையில் இந்த ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு ஊவா மாகாணசபைக்கு முடியாமல் போனது. ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த 853 பேரும் தேசிய உயர் டிப்ளோமாதாரிகள் 158 பேரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு தகுதியுள்ளவர்களாக உள்ளனர். நாம் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறோம். வெற்றிடங்கள் இரண்டாயிரத்திற்கு மேல் உள்ளது. தகுதி பெற்றவர்கள் சுமார் ஆயிரம் பேர் வரை உள்ளோம். இதனூடாக வெற்றிடங்களை நிரப்ப இயன்ற போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரச்சினையை தீர்க்க வழியிருந்தும் உரிய அதிகாரிகள் அதற்கான நடவடிக்கையை எடுக்க முயலவில்லை.

நாம் அறிவித்தோம். எழுத்து மூலமாக தெரியப்படுத்தினோம் எமக்கு நியமனம் வழங்குமாறு. எனினும் மாகாணசபை, ஆளுநர் அலுவலகம் மற்றும் உரிய அதிகாரிகள் தீர்வை பெற்றுத்தர மட்டுமல்ல, கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கி்த் தருவதிலும் தோல்வியடைந்துள்ளனர். எமக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் ஊவா மாகாண பரீட்சை பெறுபேறுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எமது உரிமையை மீட்டெுக்க கடந்த மூன்று வருட காலமாக நாம் போராடி வருகிறோம். ஒரு முறை நாம் பரீட்சையில் தோற்றினோம். வழக்கொன்றின் காரணமாக நாம் வீட்டில் இருக்க வேண்டியேற்பட்டது. அது மிகவும் அநீதியானது. இரண்டாவது முறையும் எழுதினோம். ஏனைய அனைத்து மாகாணங்களிலும் சித்திடைந்தவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நாம் இன்னும் போராடுகிறோம் என்று ஊவா மாகாண ஆசிரியர் போட்டிப்பரீட்சையில் சித்திடைந்தோர் சங்கத்தின் செயலாளர் ஜயலத் கே ஆராய்ச்சி தெரிவித்தார்.

மவ்பிம

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image