இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பிரதி பொலிஸ் மா அதிபராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவருடைய பணிகளில் முன்னெடுத்து செல்வதில் ஏற்பட்டுள்ள தடையை தகர்த்து அவருடய தொழில் உரிமையை பாதுகாக்க பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.
இலங்கையில் முதலாவது பெண் பிரதி பொலிஸ் மா அதிபராக பிம்ஷானி ஜாசிங்க ஆராய்ச்சி அண்மையில் நியமிக்கப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தார். எனினும் அப்பதவியை அதிகாரமற்றதாக்குமாறு கோரி 32 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர். திருமதி ஜாசிங்க ஆராய்ச்சி நியமிக்கப்பட்டுள்ள குறித்த பதவிக்கான விதிமுறைகளில் 'பெண்' என்ற வார்த்தை குறிப்பிடப்படாமை இம்மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் எந்தவொரு பெண் பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க முடியாது என்றும் இம்மனுவில் சுட்டக்காட்டப்பட்டுள்ளது. எனவே குறித்த அதிகாரியும் பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நியமனம் வழங்கலில் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள் அப்பதவியை அதிகாரமற்றதாக்கி உத்தவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் சமூகம் நேற்று (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த மனுவுக்கு பலத்த ஆட்சேபத்தை வௌியிட்டுள்னர்.
"பெண் பொலிஸ் அதிகாரிகள் அவர்களின் திறமைக்கமைய உயர் பதவிகளுக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கவேண்டும். வாய்ப்பு வழங்காமை பெண்களுக்கு காட்டும் வேறுபாடாகும். இவ்விடயம் தொடர்பில் பலத்த எதிர்ப்பை நாம் வௌியிடுகிறோம். நாம் அப்பெண் பொலிஸ் அதிகாரியின் தொழில் பாதுகாப்புக்கு முன்னிற்போம் என்று இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே கருத்து வௌியிட்டார்.