SLBFE இல் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை ஆரம்பம்

SLBFE இல் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை ஆரம்பம்
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் கிடைக்கப்பட்டுள்ள 15 முறைப்பாடுகள் தொடர்பில்  விசாரணை செய்வதற்காக உள்ளக கணக்காய்வு பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளதாக பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆட்சிக் காலத்தில் அரசியல்வாதிகள் தங்களது உறவினர்களை பணியகத்தில் வைத்துக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முறையற்ற விதத்தில் E-8 விசா பிரிவின் கீழ் தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்காக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நிலையில், தென்கொரிய தூதரக காரியாலயத்தின் அறிவுறுத்தலுடன் அந்த தொழில் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
இதற்கமைய வழங்கப்பட்ட விசா செல்லுபடியற்றதாகி உள்ளது. மோசடியாளர்கள் தென்கொரியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து பெரும்பாலானவரிடம் பண மோசடி செய்துள்ளமை தொடர்பில் பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
இதேநேரம் உரிய முறைமையின்றி இஸ்ரேல் தொழில் வாய்ப்புக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக அரசியல் தலையீடுகள் செய்யப்பட்டதன் காரணமாக தற்போது பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பல்வேறு அரசியல் தலையீடுகளின் காரணமாக கடந்த ஆட்சி காலத்தில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிலையை மாற்றுவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் பணியகத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image