சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 35 பேர்

சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 35 பேர்

இலங்கையின் மேற்குக் கடற்பகுதியிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

அவர்களை ஏற்றிச்சென்ற பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. பாணந்துறை கடற்பகுதியில் நேற்று மாலை கடற்படையினர் கண்காணிப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த பல நாள் மீன்பிடிக் படகொன்றை சுற்றிவளைத்து சோதனையிட்டுள்ளனர்.

அதன்போது, இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் படகில் செல்ல முயற்சித்த,  ஆட்கடத்தல்காரர்கள் 5 பேர் உட்பட 25 ஆண்கள், 4 பெண்கள் மற்றும் 6 சிறுவர்களை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் இழுவை படகின் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருந்ததாகவும், குறித்த படகு நீண்ட கடல் பயணத்திற்கு பொருத்தமற்ற வகையில் இருந்ததாகவும் மேலதிக ஆய்வுகளின் போது தெரியவந்துள்ளது.

திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 6 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு சட்டவிரோத கடல் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆட்கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள இவ்வாறான ஆள் கடத்தலில் சிக்கி சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு பிரவேசிக்க முயற்சித்து சட்டத்தின் முன் சிக்குவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களை கோருகிறது.

பழைய மற்றும் நீண்ட கடல் பயணத்திற்குப் பொருத்தமற்ற பல நாள் மீன்பிடிக் படகுகள் தொடர்ந்தும் இவ்வாறான ஆட்கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், அவ்வாறான படகுகளில் சட்டவிரோதக் குடியேற்றத்தை மேற்கொள்ள முற்பட்டால் உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்படும் எனவும் பொதுமக்களை கடற்படை எச்சரித்துள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image