சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்
சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு தெரியபடுத்தப்பட்டுள்ளதாக தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.
குறித்த பெண் கடந்த 10 ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.
வீட்டு உரிமையாளர் அந்தப் பெண்ணை தற்காலிக கடவுச்சீட்டின் ஊடாக நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும் தற்போது 75 வயதான அவர் ஹிந்தகஹவெவ பண்டாரகொஸ்வத்த பகுதியில் வசிப்பதாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன.
அந்தப் பெண் குளியாப்பிட்டியவிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் ஊடாக 1995 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு சென்றதாக குறிப்பிடப்படுகிறது.
ஒரு வருடத்தின் பின்னர் குடும்பத்தினருடனான அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தாயாரின் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் 1999 ஆம் ஆண்டில் வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்ததாகவும் அந்தப் பெண்ணின் மகன் தெரிவிக்கிறார்.
சுய நினைவு இழந்து நடமாட முடியாத நிலையிலுள்ள அந்தப் பெண்ணுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலம் - நியூஸ்பெஸ்ட் தமிழ்