கத்தாரில் போலி தொலைபேசி அழைப்புக்கள் குறித்து எச்சரிக்கை
தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைக் கோரும் எண்களில் இருந்து அழைப்புகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் (MoI) பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கத்தார் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் போது, பாதுகாப்புத் துறையின் உதவி இயக்குநர் லெப்டினன்ட் சக்ர் கமீஸ் அல் குபைசி, நம்பகத்தன்மையின் தோற்றத்தை உருவாக்குவதற்காக கத்தார் தொலைபேசி எண்களில் இருந்து வரும் மோசடியான தொலைபேசி அழைப்புகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையைில் “சமீபத்தில், கத்தாரில் பல குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மோசடியான தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுள்ளனர். அழைப்பாளர்கள் மேற்படி நபர்களின் வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு அல்லது அவர்கள் பணப்பரிசை வென்றதாக பொய்யாகத் ஆசைவார்த்தைகளை பயன்படுத்துகின்றனர் என்றார்..”
அவர் மேலும் கூறியதாவது: “சிலர் இந்த முதலீடுகளின் வருமானத்தை அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர். குடிமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அல்லது விவரங்களை அதிகாரப்பூர்வமற்ற நிறுவனத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று நான் அறிவுறுத்த விரும்புகிறேன். எச்சரிக்கையாக இருப்பது மற்றும் இரகசிய விபரங்களை வழங்குவதைத் தவிர்ப்பது கட்டாயம் என்பதாக தெரிவித்துள்ளார்கள்.
கத்தார் உள்துறை அமைச்சின் பொருளாதார சைபர் குற்றத் தடுப்புத் துறை இந்தப் பிரச்சினையைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பதாகவும், அதைத் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அல்குபைசி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி - கத்தார் தமிழ்