இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு

யுத்த காலத்தில் இந்தியாவுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்,

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இந்த குழுவில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், வௌிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்தவர்களை தாயகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு, ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு (OFERR) விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி செயலகத்தில் இன்று(05) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே மாயாதுன்னே, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ். சந்திரஹாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த விசேட கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

தமிழகத்தில் சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 3,800 பேர் மாத்திரமே தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்துவதற்கான ஜனாதிபதி செயலாளரினால் இன்று(05) புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இதற்கான ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image