அரசியல் - பொருளாதார சவால்களை எதிர்கொள்வது குறித்து இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
2022 ஏப்ரல் 26ஆந் திகதி இடம்பெற்ற தூதுவர்கள் குழுவுடனான சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மற்றும் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை சுட்டிக் காட்டினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்ட கணிசமான திருத்தங்கள் மற்றும் பயங்கரவாதத்தின் சமகால பரிமாணங்களுக்கு ஏற்ப அதனைக் கொண்டு வருவதற்கு விரிவான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை ஜனாதிபதி நடாத்திய சந்திப்பு மற்றும் நிலம் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதிகளின் பிரச்சினைகள் உட்பட வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கும் சில பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார். அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான நிபுணர்கள் குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டிய அவர், விரிவான ஆலோசனைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
சிவில் சமூக அமைப்புக்களுடனான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் தேசிய தன்னார்வத் தொண்டு நிறுவன செயலகத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான சமீபத்திய தீர்மானம் ஆகியன குறித்து குறிப்பிடுகையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்களுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மேற்கொள்ளும் வழக்கமான உரையாடல் மற்றும் அவர்களின் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்கான அர்ப்பணிப்பு குறித்து அமைச்சர் பீரிஸ் தூதுவர்களுக்கு விளக்கினார்.
கடந்த ஆணைக்குழுக்களின் கண்டறிதல்கள் மற்றும் முன்னோக்கிச் செல்லும் வழிகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலவும் நிலைமை மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2021 ஏப்ரல் 29