பாகிஸ்தான் வாழ் இலங்கையரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை!
தற்போது பாகிஸ்தானில் வாழும் அனைத்து இலங்கையர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
பாகிஸ்தானில் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் பிரியந்த குமார கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டமைக்கு கடும் கண்டத்தை தெரிவிப்பதுடன் பெரும் கவலையடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இலங்கையர்களுக்கும், மனிதநேயத்தை மதிக்கும் உலகில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தக் கொடூரப் படுகொலையையடுத்து உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. , நட்புநாடு என்ற வகையில் அவ்வரசாங்கத்தின் மீது இலங்கை ஜனாதிபதியும் மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இது தொடர்பாக எடுக்கப்படும் அடுத்த கட்ட நடவடிக்கையை இலங்கை அரசும் மக்களும் அவதானித்துக்கொண்டுள்ளனர்.
"இந்த சம்பவம் குறித்து கேட்டவுடன் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை குறித்து நானும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலின்படி, அவர்கள் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்."
எந்த வடிவில் வந்தாலும் தீவிரவாத செயற்பாடுகள் சமூகத்தை ஆழமாக குழப்புகின்றன. எனவே தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒரே குறிக்கோளுடன் செயற்பட வேண்டும் என்பதை இவ்வாறான செயற்பாடு உறுதிப்படுத்துகிறது.
இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தினால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள பிரியந்தவின் குடும்பத்தினருக்கு நானும், இலங்கை அரசும் நாட்டு மக்களும் உள்ளோம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டுகிறேன் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.