உலக தொழில் சந்தை தொழில்வாய்ப்பு? இலங்கையர்களுக்கு அவசியமான தகைமைகள்?
உலக தொழில் சந்தையில் தொழில்வாய்ப்பு எவ்வாறுள்ளது? அதற்காக இலங்கையர்களுக்கு இருக்க வேண்டிய தகைமைகள் என்ன? என்பது குறித்து தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை இலக்காகக் கொண்டு, உலக தொழில் சந்தையில் 2022, 2023, 2024 முதலான ஆண்டுகளை இலக்காகக் கொண்டு இலங்கையில் இளைஞர்களை தொழில்துறைக்கு பயிற்றுவித்து அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய தொழில் துறைகளை தேடி வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தொழில் அமைச்சின் மூலமாகவாவது முன்னெடுக்க முடியுமா என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, அண்மையில் சபையில் கேள்வி எழுப்பினார்
இதற்கு பதிலளித்த தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தற்போது அவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாக குறிப்பிட்டார்.
தற்போது நாங்கள் திறன் அபிவிருத்தி அமைச்சு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களுடனட திறன் அபிவிருத்தி கற்கை நெறிகளை ஏற்பாடு செய்துள்ளோம். தற்போதைய கொவிட் பரவல் நிலையை காரணமாக அந்தக் கற்கை நெறிகளுக்கு இளைஞர் முழுமையாக இணைந்து கற்கையில் ஈடுபடுவதற்கான வசதி இதுவரையில் ஏற்படவில்லை.
சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் அமைப்பு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புகளை, வெளிநாடுகளில் உள்ள தொழில் வாய்ப்புக்களின் அவசியம் கருதி பயிற்றுவிப்பதற்கு அவசியமான நிதி உதவிகளை வழங்குவதற்காக தற்போது என்னுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது.
இதன் ஊடாக உலக தொழில் சந்தையில் பயிற்றுவிக்கப்பட்ட தொழில்துறைக்கு அவசியமான மொழி நிபுணத்துவத்தை வழங்குவதுடன் அதற்கான தொழில்நுட்ப திறனையும் வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
ஆனால் சிங்கள மற்றும் ஆங்கில மொழியை மாத்திரம் கற்றுக்கொண்டு வெளிநாட்டில் சென்று தொழில் புரியலாம் என இலங்கையில் உள்ளவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் தான் பிரச்சினை இருக்கின்றது. அவ்வாறு செய்ய முடியாது. இதற்காக ஏதாவது அர்ப்பணிப்பை செய்து ஒரு வருடமாவது நன்றாக கற்று அந்த நிபுணத்துவத்தை பெற்றுக்கொள்ளவேண்டும்.
தற்போதைய கொவிட் பரவல் காரணமாக ஜப்பானில் விசா வழங்கல் இடம்பெறுவதில்லை. கொரியாவில் மிகவும் வரையறுக்கப்பட்ட தரப்பினருக்கு திறக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிலும் இன்னும் திறக்கப்படவில்லை. அதுமாத்திரமன்றி பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான நாடுகளில் நாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே இந்த நிலைமையானது சுமுக நிலையை அடைந்ததன் பின்னர் இதனை விடவும் அதிகமானோரை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.