Video தனிமைப்படுத்தலுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு: நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்
பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பலரை தனிமைப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு தொழிற்சங்க தரப்பினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று மாலை சில மணிநேரங்களாக பதற்ற நிலை நீடித்தது.
கல்வியை இராணுவ மயமாக்கல் மற்றும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் 33 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இன்று பிற்பகல் அவர்கள் கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம உத்தரவிட்டது.
எவ்வாறிருப்பினும், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை தனிமைப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்க பிரமுகர்கள் உட்பட்ட உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால், பொலிஸாருக்கும் அவர்களுக்கும் இடையில் இன்று மாலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.
நீதிமன்றம் அவர்களை பிணையில் விடுவித்துள்ளபோதிலும், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கை சட்டவிரோமானது எனத் தெரிவித்து தொழிற்சங்கத் தரப்பினரால் எதிரப்பு தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறிருப்பினும், பொலிஸார் அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்காக பஸ்ஸில் ஏற்றிச்சென்றனர்.
காணொளியை பார்வையிட இந்த இணைப்பை அழுத்தவும்