Online வகுப்புகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தல்
இணையவழி (Online) வகுப்புகள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இணையவழி வகுப்புகளையும் ஆசிரியர்கள் புறக்கணிப்பர் என்றும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகளின் கைதை எதிர்ப்போம் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொத்தலாவல இராணுவ பல்கலைக்கழக சட்ட மூலத்துக்கு எதிராக, நாடாளுமன்ற சுற்றுவட்டத்தின் அருகே நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் பொலிஸாரால் நேற்று 8ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டு, பிற்பகல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோரை தனிமைப்படுத்த வேண்டுமென நீதிமன்றத்தின் அனுமதியை பொலிஸார் கோரியிருந்த போதிலும், நீதிமன்றம் பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது.
ஆயினும், அதிரடிப்படை, கலகமடக்கும் பிரிவின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றுக்கு ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இந்த அரசின் இராணுவமயமாக்கல், அரச அடக்குமுறை, நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத சட்ட விரோத ஆட்சி முறை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை, ஆசிரியர் சங்க உறுப்பினர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பலவந்தமான கைது என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அனைத்து ஆசிரியர்களும் தாமாக முன்வந்து கற்பித்துவரும் இணையவழி தொலைக்கல்வி வகுப்புகளையும் இன்று முதல் புறக்கணித்து செயற்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.