ஊடகர் தரிந்து கைதுசெய்யப்பட்டால் கடும் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும் - FMM
தம்மை கைதுசெய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதென புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஏதேனுமோர் வகையில் சதி செய்து அவர் கைதுசெய்யப்பட்டால், அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தமைக்காக சில பொலிஸ் அதிகாரிகள் தன்னை கைதுசெய்ய முயல்கின்றனர் என ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்
பதில் பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.அந்த கடிதத்தில் தன்னை கைதுசெய்வதற்கு பொலிஸ் அதிகாரிகள் சிலர் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக தான் தொடர்ச்சியாக வெளியிடும் செய்திகளுடன் தொடர்புபட்டதே இந்த விடயம் என அவர் தெரிவித்துள்ளார்.
நான் செய்திகளை வெளியிடுவது விசாரணைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என சிஐடியினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள தரிந்து ஜெயவர்த்தன அது பொய்யான குற்றச்சாட்டு என தெரிவித்துள்ளார்.