முறைசாரா துறை தொழிலாளர்களுக்காக NLAC இல் பிரதிநிதித்துவம் கோரும் ப்ரொடெக்ட் சங்கம்

முறைசாரா துறை தொழிலாளர்களுக்காக NLAC இல் பிரதிநிதித்துவம் கோரும் ப்ரொடெக்ட் சங்கம்

இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் தொழில்சார் உரிமைகள் இல்லை.

எனவே, அவர்கள் தொடர்பாக தொழிலாளர் திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றினது குறிப்பிடத்தக்க தலையீடு தேவை. அதற்காக முறைசாரா தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமான ப்ரொடெக்ட் சங்கம், தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில், ஒரு பிரதிநிதித்துவத்தைக் கோரி தொழிலாளர் அமைச்சரான பிரதமர் திருமதி ஹரிணி அமரசூரியவிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முறைசாரா துறை தொழிலாளர்களுக்காக தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளல்

இலங்கையின் பிரதமராகவும், முதலாவது பெண் தொழில் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டமைக்கு எமது சங்கத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம். தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், நாட்டில் நல்ல பணிச்சூழலை உருவாக்குவதற்கும் எடுக்கப்படும் கொள்கை விடயங்கள் மற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நாம் எதிர்பார்க்கிறோம்.

ப்ரொடெக்ட் சங்கம் என்பது இலங்கையில் தனியார் துறை மற்றும் முறைசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு தொழிற்சங்கமாகும். அதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல், நாங்கள் வீட்டுப் பணியாளர்களையும், முறைசாரா துறையில் பணிபுரிபவர்களையும் ஒருங்கிணைத்து வருகிறோம். அதேநேரம், நாங்கள் சர்வதேச வீட்டுத் தொழிலாளர் சம்மேளனத்தின் (IDWF) ஒரு அங்கத்தவராக உள்ளதுடன்,  சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்துடன் (ILO) இணைந்து செயற்படும் ஒரு தொழிற்சங்கமாகவும் உள்ளோம்.

இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையான தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் தொழில்சார் உரிமைகள் இல்லை. முறைசார் துறை தொழிலாளர்களும், முறைசாரா தொழில் நிபந்தனைகளுக்கு தள்ளப்படுவதால், இந்த தொழிலாளர் பிரச்சினைகள் எதிர்காலத்தில் முன்னோக்கிவரும் என்பதைக் கூறவேண்டியதில்லை.

அவர்கள் தொடர்பில் தொழில் திணைக்களம் மற்றும் தொழில் அமைச்சின் கணிசமான தலையீடு தேவை. இந்த நிலையில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில், முறைசாரா துறையை ஒருங்கிணைக்கும்  தொழிற்சங்கத்தின் பிரதிநிதித்துவம் இருப்பது அத்தியாவசியமானதாகும்.

குறிப்பாக முறைசாரா துறையில் பணிபுரிபவர்களை அடையாளம் காணுதல், நாட்டில் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவது, உள்ளாட்சி அமைப்புகளில் முறையான தரவு கட்டமைப்பில் அவர்களை உள்ளடக்குவது,

சிறு வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோர்களை அடையாளம் கண்டு மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்துதல், உள்ளூர் தயாரிப்புகளுக்கான சர்வதேச சந்தை இடத்தை விரிவுபடுத்துவதன் மூலம் அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டங்களை உருவாக்குதல்,

முறையான தொழில்களாக மாற்றக்கூடிய தொழில்களுக்கான புதிய தொழிலாளர் சட்டங்களை உருவாக்குவதல் அல்லது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டங்களை திருத்துவதன் மூலம், முறைசாரா துறையில் திறன் அடிப்படையிலான வேலைகளை பாதுகாத்து,

வேலை செய்யக்கூடிய அளவிற்கு மேம்பாடுகளைச் செய்து, முறைசார தொழில் துறையினருக்காக முறையான சமூக பாதுகாப்ப வேலைத்திட்டத்தை உருவாக்குதல் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் செய்யவேண்டி செய்யப்பட வேண்டியுள்ளன.

எனவே, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில், முறைசாரா துறையை பிரதிநிதித்துவப்படுத்த ப்ரொடெக்ட் சங்கத்திற்கு வாய்ப்பளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image