ATA மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை மீளப்பெறுமாறு சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வலியுறுத்தல்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலங்களை வன்மையாகக் கண்டிப்பதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட இரண்டு சட்டமூலங்களையும் உடனடியாக மீளப்பெற வேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்து தற்போது வௌியிடப்பட்டுள்ள சட்டமூலத்தில் கவனத்திற்கொள்ளப்படவில்லை என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களின் கருத்துகளைப் பெறாமல் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலத்தின் ஊடாக மக்களுக்கு பொறுப்புக்கூறுதல், வெளிப்படைத்தன்மையுடன் செயற்படல் என்பவற்றை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தௌிவாவதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதம், தவறான அறிக்கைகள், அதனுடன் தொடர்புடைய தவறான விளக்கங்கள் ஆகியவற்றின் வரையறைகள் இரண்டு சட்டமூலங்களிலும் மிகவும் சிக்கலானதாகக் காணப்படுவதாக சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் இயல்பான செயற்பாடுகள் மீது நிர்வாகக் கட்டுப்பாட்டை உருவாக்கி , கடுமையான சட்டங்களைத் திணிக்கும் இந்த சட்டமூலங்கள் விரும்பத்தகாத, தன்னிச்சையான முயற்சி என்று அந்த அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சட்டமூலங்களும் நீதித்துறையின் விடயங்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுவதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு தெரிவித்துள்ளது.
மக்களின் மீற முடியாத சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு சட்ட வல்லுநர்களுக்கு இருப்பதையே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல், பேச்சு, கருத்து மற்றும் சிந்தனை சுதந்திரத்தை பறித்து, நிறைவேற்று அதிகாரத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் இத்தகைய சட்டங்கள், அரசியலமைப்பின் கீழ் மக்களின் இறையாண்மையை ஆக்கிரமிப்பதாக சட்டத்தரணிகள் ஒன்றிணைவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - நியூஸ்பெஸ்ட்