சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாத ஆபத்தான தொழில்கள் பட்டியல் 71 ஆக அதிகரிக்க நடவடிக்கை
16 முதல் 18 வரையான சிறுவர்களை ஈடுபடுத்தக் கூடாத ஆபத்தான தொழில்கள் பட்டியலை 71 வரைக்கும் அதிகரிப்பதற்கான கட்டளைகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.
நேற்று முன்தினம் (26) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு,
1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டத்தின் கீழ் ஆபத்தான தொழில் தொடர்பான கட்டளைகளை திருத்தம் செய்தல்
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1956 ஆம் ஆண்டு 47 ஆம் இலக்க பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஜனவரி மாதம் தொடக்கம் சிறுவர்களைத் தொழிலில் அமர்த்தலுக்கான குறைந்தபட்ச வயது 16 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் குறைந்தபட்ச வயது சமவாயத்தை இலங்கையில் ஏற்று ஒப்புதலளித்த பின்னர் 2006 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க திருத்தப்பட்ட பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தொழிலில் அமர்த்தல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கமைய, தொழில் உறவுகள் விடயத்திற்கும் பொறுப்பான அமைச்சரால் அபாயகரமான தொழில் கட்டளைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 16-18 வரையான இளைஞர்களுக்கு 51 ஆபத்தான தொழில்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில்களில் ஈடுபடுத்தல் சட்டத்தில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் அடையாளங் காணப்பட்டுள்ள குறித்த கட்டளைகளை மேலும் திருத்தியமைத்து வீட்டுப்பணி, ஒப்பனை அலங்காரத் தொழில்கள் மற்றும் கணினி மற்றும் ஏனைய இலத்திரனியல் உபகரணங்களுடனான தொழில் உள்ளிட்ட தொழில்களை சமகாலத்திற்கு ஏற்ற வகையில் புதிய 20 தொழில்கள் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆபத்தான தொழில்கள் பட்டியலை 71 வரைக்கும் விரிவாக்கம் செய்து சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும், பின்னர் திருத்தப்பட்ட கட்டளைகள் அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.