556 ஒப்பந்த அடிப்படை பணியாளர்களின் நிலை குறித்து கோபா குழுவில் அவதானம்
அரச நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 556 பணியாளர்கள் குறித்து கோபா குழுவின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைத் தாண்டி நாளாந்த சம்பள அடிப்படையில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் 556 பேர் காணப்படுவதாக கோபா குழுவில் புலப்பட்டது. அதற்கமைய, நாளாந்த சம்பள அடிப்படையில் 396 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் 160 பணியாளர்கள் இருப்பதாகவும் புலப்பட்டது.
மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் அண்மையில் (05) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் பணியாற்றுகிறார்.
இந்த பணியாளர்கள் அத்தியாவசிய பணியாளர்கள் என வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்ள பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாகவும், அரசாங்க மாற்றத்துடனான கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக அதனை மேற்கொள்ள முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பணியாளர்கள் திட்டங்களின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடந்த காலங்களில் பாரிய திட்டங்கள் காணப்பட்டாலும் தற்பொழுது காணப்படும் டொலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறைந்துள்ளதாக சரித ஹேரத் மற்றும் வருகை தந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொண்டால் அவர்களுக்கான சம்பளத்தை திறைசேரியிலிருந்தே வழங்கவேண்டி ஏற்படும் என தெரிவித்தனர். அதனால் அத்தியாவசியப் பணியாளர்களை மாத்திரம் நிரந்தரமாக்குவது தொடர்பில் கண்டறிந்து செயற்படுமாறும் மேலதிகப் பணியாளர்கள் இருந்தால் இழப்பீடு வழங்கி அவர்களை நீக்குவது தொடர்பில் கருத்திற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்பொழுது திட்டங்கள் குறைவு என்பதால் தேவைக்கமைய இந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் முக்கியத்துவ பட்டியல் உள்வாங்கப்படும் வகையில் அறிக்கையொன்றை 3 மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு சரித ஹேரத் பரிந்துரைத்தார்.
அதேபோன்று, 2012 ஆம் ஆண்டில் 158 மில்லியன் ரூபாய் செலவு செய்து கொள்வனவு செய்த இரண்டு கொங்கிறீட் இயந்திரங்கள் மற்றும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார்ப் இயந்திரம் இதுவரை செயலற்ற நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 2012 முதல் 2022 நவம்பர் வரை கொங்கிறீட் இயந்திரங்கள் இரண்டும் 420 மணித்தியாலங்களே பயன்படுத்தியுள்ளமை, கார்ப் இயந்திரம் 2012 முதல் இதுவரை செயலற்றுக் காணப்படுகின்றமை இதன்போது புலப்பட்டது.
அதற்கமைய, 2011 ஆம் ஆண்டளவில் பாரியளவில் பாதைகள் கொங்கிறீட் இடப்பட்டதாகவும் அதனால் 2012 இல் இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும் இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்ததன் பின்னர் வீதிகளுக்கு கொங்கிறீட் இடுவது படிப்படியாகக் குறைந்ததாகவும் அதனால் இந்த இயந்திரங்களின் பயன்பாடு குறைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். அதனால் தற்பொழுது இந்த இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் தமக்கு போதுமானது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சின் தலையீட்டில் தற்பொழுது வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அதனால் எதிர்காலத்தில் அவை பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இதன் அடுத்த கட்டம் தொடர்பில் 3 மாதங்களில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களில் இல்லாத திட்ட ஒருங்கிணைப்பு பதவிக்கு 2 அதிகாரிகள் 2020 ஒக்டோபர் முதல் இணைத்துக்கொண்டுள்ளமை தொடர்பிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகன வாடகை மற்றும் எரிபொருள் செலவு என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேட திட்டங்களுக்கு இவ்வாறு அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் அந்த திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களது சேவையை நிறைவு செய்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோபா குழு பரிந்துரைத்தது.
அதற்கு மேலதிகமாக, அதிகாரசபைக்கு சொந்தமான 20 வருடங்கள் பழைமையான 6 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் ஒப்பந்தக்காரர் ஒருவர் கடன் அடிப்படையில் அஸ்போல்ட் பெற்றுக்கொண்டமை மற்றும் அந்த நிதியை அறவிடுவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, பிரசன்ன ரணவீர, டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஜே.சி. அலவதுவல, (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, ஹெக்டர் அப்புஹாமி, அஷோக் அபேசிங்க, வீரசுமன வீரசிங்க, (கலாநிதி) சரத் வீரசேகர மற்றும் (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.