வடக்கு, கிழக்கில் ஆசிரியர் அதிபர்கள் ரூ5.000 பெறுகிறார்கள் என்ற மாயை உருவாக்கம்

வடக்கு, கிழக்கில் ஆசிரியர் அதிபர்கள் ரூ5.000 பெறுகிறார்கள் என்ற மாயை உருவாக்கம்

வடக்கு, கிழக்கிலே இந்த 5000 கொடுப்பனவை ஆசிரியர்கள்,அதிபர்கள் பெறுகிறார்கள் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கி தென்னிலங்கையிலே ஒரு இனவாதத்தை தூண்டும் வகையிலே அரசு செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்குரிய 5000 ரூபா கொடுப்பனவு என்ற பெயரில் கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிடப்பட்டிருக்கின்றது. முழுக்க முழுக்க அதிபர் ஆசிரியர்கள் உடைய தொழிற்சங்க போராட்டத்தை திசை திருப்பும் நோக்கத்தோடு தான் இந்த சுற்றுநிறுபம் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பதை ஆசிரியர் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கை பொறுத்தமட்டில் மிக அவசர அவசரமாக இந்த தரவுகளை பெறுவதற்கு இந்த அரசாங்கம், அதிகாரிகள் ஊடாக அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. இதற்கு காரணம் என்னவென்று சொன்னால் இங்கே இணையவழிக் கற்பித்தல் நடப்பதாக தென்னிலங்கையில் காட்டி பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு முரண்பாடான நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பதேயாகும்.

தென்னிலங்கையில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் வடக்கிலே ஒரு கணிசமான அளவு இணையவழிக் கற்பித்தல் நடந்துகொண்டிருந்தது. அந்த காலத்தில் தொழிற்சங்க போராட்டத்தோடு இணைவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. 60 வீதமான மாணவர்கள் இணைய கல்வி ஊடாக எந்தவித பயனையும் பெறாத நிலையில், இந்தக் காலத்தில் தமது பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் என்ற அடிப்படையில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

அந்த காலத்திலே மாணவர்களின் நன்மை கருதி இணையவழிக் கற்பித்தலை நாங்கள் ஆரம்பத்தில் மேற்கொண்டிருந்தாலும் தொழிற்சங்க போராட்டத்திற்கு பின்னர் ஆதரவு தெரிவித்த நிலையில் இந்த 5000 கொடுப்பனவை நாங்கள் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக பெறுவதில்லை என்றுள்ள நிலையில் இருக்கின்ற பொழுது, அதிகாரிகளும் ஒருசில ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்களும் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களை தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொண்டு பதிவுசெய்ய வற்புறுத்துவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருக்கின்றது.

நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். இதுபோன்ற செயற்பாடுகள் தொடர்பில் அவர்களுக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடுவோம்.

ஆசிரிய ஆலோசகர் சங்கமும் இந்தப் போராட்டத்தில் இணைந்திருக்கின்றது. ஆனால் ஒருசில அதிகாரிகளின் செயற்பாடு ஆசிரியர்களுடைய போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கோணத்திலேயே உள்ளது. அவர்களுக்கு ஒரு விடயத்தை கூறிவைக்க விரும்புகிறேன். சுபோதினி ஆணைக்குழுவின் அறிக்கையில் ஆசிரிய ஆலோசகர்கள் தொடர்பிலும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது என்பதை மறக்கவேண்டாம். ஆகவே எங்களுடைய போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்கின்ற வகையில் ஒரு சிலர் செயற்படுவது அனைத்து சமூகத்தையும் பாதிக்கும் என்ற எண்ணத்துடன் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.

வடக்கு, கிழக்கிலே இந்த 5000 கொடுப்பனவை பெறுகிறார்கள் என்ற மாயை தோற்றத்தை உருவாக்கி தென்னிலங்கையிலே ஒரு இனவாதத்தை தூண்டும் வகையிலே செயற்படுகின்ற அரசுக்கு துணை போகாதீர்கள் - என்றார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image