ஆசிரியர் சேவையில் 33,000 பேர் இணைக்க நடவடிக்கை!

ஆசிரியர் சேவையில் 33,000 பேர் இணைக்க நடவடிக்கை!

எதிர்வரும் மே மாதமளவில் 33,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (22) பாராளுமன்றில் தெரிவித்துளளார்.

இந்நியமனம் வழங்கலில் அண்மைக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் இருந்து வௌியேறிய மாணவர்களையும் மாகாண மட்ட ஆசிரியர் நியமனத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நியமனங்கள் வழங்கப்பட்ட பின்னர் விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், தொழில்நுட்பம் என்பவற்றில் உயர்தரப்பிரிவில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் ஆராயப்படும். கண்டி மாவட்டத்தில் தேசிய, இரண்டாம்நிலை மற்றும் ஆரம்பப் பாடசாலைகள் 651 உள்ளன. இவ்வணைத்துப் பாடசாலைகளிலும் 274928 மாணவர்கள் பயில்கின்றனர். 17202 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பாடசாலைகளுக்கு வருடாந்த ஆசிரியர் இடமாற்ற முறையை பயன்படுத்த முடியும்.

ஆசிரியர் இடமாற்றம் செயற்பாட்டில் உள்ளது. இது தவிர 7500 பேர் மாத்திரமுள்ள கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிலுநர்களுடைய பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் தேசிய கல்வி நிறுவகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பெறுபேறுகள் ஆராயப்பட்ட பின்னர் மார்ச் 31ம் திகதி பெறுபேறுகள் வௌியிடப்படும். அதற்கமைய தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு மாவட்ட மற்றும் மாகாணங்களுக்கமைய நியமிக்கப்படுவார்கள். மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு கல்வியியற் கல்லூரி நியமனங்கள் வழங்கப்படும். தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்களுக்கு அமைச்சினூடாக நியமனங்கள் வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் ஏப்ரல் மாத நிறைவடைவதற்கு முன்பாக கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் 7500 பேர் நியமிக்கப்படுவார்கள்.

அதற்கு மேலதிகமாக 26,000 பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்வதகாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளன. நாளைமறுநாள் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. 53,000 பட்டதாரிகள் பரீட்சையில் தோற்றவுள்ளனர். அவ்வினாத்தாள்கள் 2 வாரங்களுக்குள் திருத்தப்பட்டு பெறுபேறுகள் மாகாணங்களுக்கு கையளிக்கப்படும். கட்டமைக்கப்பட்ட நேர்முகத்தேர்வின் பின்னர் மாகாணமட்டத்தில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இவ்விரு முறைகளினூடாக 33,000 ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் நியமனம் வழங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் போன்ற உயர்தர பாடங்களுக்கு நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்படுகிறது. அதன் நிறைவில் எத்தனை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது என்று அறியப்படும். அதற்கு தீர்வு காணும் பொருட்டு மாகாண மட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் விரைவில் பல்கலைக்கழகத்தை விட்டு வௌியேறிய பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image