நடுக்கடலில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் குறித்து வியட்நாம் வெளியிட்ட தகவல்
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும், நலமாக உள்ளதாக நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லே தி து ஹங் தகவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி, மாலை 6 மணியளவில் 303 இலங்கையர்களை கனடாவுக்கு ஏற்றிச்சென்ற மியன்மார் கொடியுடனான லேடி ஆர் 3 என்ற கப்பல், வோங் டோ நகரிலிருந்து 258 கடல் மைல் தொலைவில் பழுதடைந்தத நிலையில், அனர்த்தத்திற்கு உள்ளானது. இதையடுத்து, கப்பலில் இருந்து சமிக்ஞை வெளியானதை அவதானித்த கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், குறித்த கப்பலுக்கு அருகே பயணித்துக்கொண்டிக்கும் கப்பல்களுக்கு சமிக்ஞையை அனுப்பியது.
நவம்பர் 7ஆம் திகதி மாலை 3.30 முதல் 5.30க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜப்பானில் இருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்த ஹேலியஸ் லீடர் என்ற ஜப்பானிய கப்பல், லேடி ஆர் 3 கப்பலுக்கு அருகில் சென்று, அதிலிருந்தவர்களை மீட்டது. இதையடுத்து, அனைத்து இலங்கையர்களும், ஹோ சி மின் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திடம் கையளிக்கப்பட்டனர்.
இதையும் வாசியுங்கள் அடுத்த மாதம் ஆசிரியர் தேர்வு போட்டிப்பரீட்சை - பயிலுநர் பட்டதாரிகளுக்கான அறிவிப்பு!
அவர்கள் தற்போது, வோங் டோ நகரம், டேட் டூ மற்றும் ஸியேன் மொக் ஆகிய மாவட்டங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த தகவலறிந்ததை அடுத்து, ஹனோய் இல் உள்ள இலங்கை தூதரகத்திற்கு, வெளிவிவகார அமைச்சினால் தகவல் வழங்கப்பட்டது.
மேலும், வியட்நாமிய சட்டம் மற்றும் சர்வதேச நடைமுறைகளுக்கு அமைய, மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து ஏனைய சர்வதேச அமைப்புகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.