22ஆம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!

22ஆம் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்!
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தச் சட்டமூலம், திருத்தங்களுடன் நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்தவொரு வாக்கும் பதிவாகவில்லை.
 
அதேநேரம், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக ஒரு வாக்கு மாத்திரம் அளிக்கப்பட்டது.
 
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் 22ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
 
வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் 40இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. இந்தத் திருத்தத்துக்கு அமைய, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ள ஒருவருக்கு, நாடாளுமன்று உறுப்பினராகும் தகைமை கிடையாது.
 
19ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட குறித்த திருத்தம், 20ஆம் திருத்தத்தின் ஊடாக நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 22ஆம் திருத்தத்தில் அது மீளவும் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
 
19ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைய, உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவை, 20 ஆம் திருத்தத்தின்மூலம், நீக்கப்பட்டு, நாடாளுமன்ற பேரவையாக திருத்தப்பட்டது. 22ஆம் திருத்தச் சட்டமூலம் ஊடாக, அரசியலமைப்பு பேரவை மீண்டும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
 
இரண்டரை வருடங்களின் பின்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையிலான ஏற்பாடுகளும் 22ஆம் திருத்தச் சட்டமூலத்தில் உள்ளன.
 
அதேநேரம், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஐ விஞ்சாத வகையிலும், அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை, 40ஐ விஞ்சாத வகையிலுமான ஏற்பாடுகள், 19ஆம், 20ஆம் திருத்தங்களைப்போன்று, 22ஆம் திருத்தத்திலும் அவ்வாறே தொடர்கின்றன.
 
 
 
 
 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image