22,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்தல் குறித்து விளக்கம்
இவ்வருட இறுதியில் ஏற்படும் 32 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,
இதற்கமைவாக 22 ஆயிரம் பட்டதாரிகள் ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
தற்போது பாடசாலைகளில் 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றன. அமுலுக்கு வரும் புதிய ஓய்வூதியக் கொள்கை காரணமாக இந்த வருட இறுதியில் சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்கள் ஓய்வு பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத் திட்டமாக பட்டதாரி ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான பரீட்சையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது அபிவிருத்தி உதவியாளர்களாக பணிபுரிபவர்களும், அரச சேவையில் உள்ள ஏனைய பட்டதாரிகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்