காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்காதீர்கள்! - ஜனாதிபதியிடம் த.மு.கூட்டணி தெரிவிப்பு
பெரும் தோட்டங்களில் வாழும் சுமார் 200,000 குடும்பங்களை, தோட்ட நிர்வாகங்களின் நவீன அடிமைத்துவ பிடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ள முன்னணி கோரிக்கையாகும்.
அதை செய்யுங்கள். அதற்கு கொள்கைரீதியாக ஆதரவு தருகிறோம். ஆனால், லயன் காம்பராக்கள்தான் புதிய கிராமங்கள் என்று நீங்கள் இன்று கூற முயல்வதை நாம் ஏற்க முடியாது. இனியும் எமது மக்கள் மலை உச்சிகளில் மலைசாதி பழங்குடி மக்கள் போன்று வாழ்வதை நாம் ஏற்க முடியாது.
லயன் குடியிருப்புகளை, “பெருந்தோட்ட புதிய குடியேற்ற கிராமங்களாக” (New Settlement Villages in the Plantation Sector) அறிவிக்கும் உத்தேசம் கொண்ட தனது அமைச்சரவை பத்திரம் இல. PS/CM/SB/297/2024 தொடர்பில் கலந்து உரையாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை ஏற்று, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. இந்த சந்தர்பத்தில் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி உரையாற்றியதாவது;
மலை நாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு என்ற பொருளில், பெரும் தோட்டங்களில், காணி உரிமையுடன் கூடிய தனி வீட்டு புதிய கிராமங்களை அமைத்து காணி உரிமை கோரிக்கையை, உங்கள் ஆட்சியில், 2015ம் ஆண்டு முதல் அரசியல் ரீதியாக ஆரம்பித்து வைத்த கட்சி தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். கடந்த வருடம், மலையக மக்கள் இந்நாட்டிற்கு வந்த 200 வருட பூர்த்தியை அரசியல் கட்சிகளும், தொழில் சங்கங்களும், சிவில் அமைப்புகளும் நினைவு கூர்ந்த நிகழ்வுகளில் மேல் எழுந்த பிரதான கோசம், காணி உரிமை கோரிக்கை ஆகும்.
ஆகவே லயன் காம்பராக்களை, “பெருந்தோட்ட புதிய குடியேற்ற கிராமங்கள்” என்று கூறி, இன்று மலையகம் முழுக்க எழுந்துள்ள காணி உரிமை கோரிக்கையை குழி தோண்டி புதைக்க வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, பிரதி தலைவர் பழனி திகாம்பரம் எம்பி, எம். வேலு குமார் எம்பி, எம். உதயகுமார் எம்பி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் தெரிவித்து, இது தொடர்பான கட்சியின் நிலைபாட்டை தெரிவிக்கும் எழுத்து மூல ஆவணத்தையும் கையளித்து உள்ளது.
2010ம் ஆண்டு எதிர் கட்சி தலைவராக நீங்கள் இருந்த வேளையில், பெரும் தோட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு, நெடுஞ்சாலை ஓரங்களில் வீடுகளை அமைக்க இடமளிப்பது மூலம்தான் அவர்களை தேசிய நீரோட்டத்துக்கு உள்ளே கொண்டு வர முடியும் என என்னிடம் நீங்கள் நேரடியாக கூறி இருந்தீர்கள். இது பற்றி 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ம் நாள், உங்கள் அமைச்சராக இருந்த போது உரையாற்றி இருந்தேன். அன்று நாம் நாடாளுமன்றத்தில் உங்கள் 40 ஆண்டுகால பொது வாழ்வை சிலாகித்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினோம். எனது உரையின் ஹன்சாட் பிரதியை உங்களுக்கு இன்று இப்போது தருகிறேன்.
தமிழ் முற்போக்கு கூட்டணி பின்வரும் ஆறு கோரிக்கைகளை கடமை பூர்வமாக உங்களிடம் முன் வைக்கிறது;
1. நீங்கள், எமது மக்களுக்கு உறுதி அளித்த வீட்டு வதிவிட காணிகளை, புவியல் ரீதியாக தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அண்மித்ததாக, அதிக பட்சம் 3 கிலோ மீட்டருக்கு உட்பட்ட ஸ்தலங்களில் வழங்குங்கள்.
2. காணியின் விஸ்தீரணம், அந்த பிரதேச செயலக பிரிவில், காணி வழங்களின் போது கடை பிடிக்கப்படும் நடை முறைக்கு ஏற்ப இருக்க வேண்டும்.
3. காணி உரிமை பத்திரத்தின் சட்ட அந்தஸ்து, நாட்டில் ஏனைய பிரதேசங்களில் வழங்கப்படும் காணி உரித்து பத்திரங்களை ஒத்ததாக இருக்க வேண்டும்.
4. காணி உரிமை பத்திரங்கள், குடும்ப பெண் தலைவிகளின் பெயர்களில் வழங்க பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இது பற்றி மேலும் நிபந்தனைகள் இருக்குமாயின், உங்களுடன் தொடர்ந்து உரையாட தமுகூ (TPA) தயாராக இருக்கிறது.
5. திருமணமான ஒவ்வொரு தம்பதிகளும், ஒரு குடும்பமாக கணிக்க பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் காணி வழங்க பட வேண்டும்.
6. இயன்றோர், தமது காணிகளில் வீடுகளை கட்டி கொள்ளட்டும். இயலாதோர், அரசாங்க மற்றும் இந்திய, சர்வதேச வீடமைப்பு திட்டங்களில் இடம் பெறட்டும்.